2011-05-02 16:07:15

பின் லேடனின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படும் அபாயம்


மே 02, 2011. இதற்கிடையே, பின் லேடனின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கவலையை வெளியிட்டுள்ளார் பாகிஸ்தான் பேராயர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தாக்க முடியாதவர்கள் தங்கள் பழிவாங்கும் எண்ணத்தை கிறிஸ்தவர்கள் மீது திருப்புவதே நடந்து கொண்டிருக்கிறது என்ற லாகூரின் முன்னாள் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா, கிறிஸ்தவர்களுக்குப் போதிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார்.
பின் லேடனின் மரணம் மூலம், பாகிஸ்தானில் தீவிரவாதப் போக்குகளின் அளவு குறையும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் அவர்.
இஸ்லாமிய புரட்சியின் தலைவராகப் பலரால் நோக்கப்பட்ட பின் லேடன், தீவிரவாதத்தின் முன்மாதிரிகையாகவும் உலக அமைதிக்கான அச்சுறுத்தலாகவும் மாறியது குறித்த கவலையை வெளியிட்ட பேராயர், இம்மரணத்திற்குப்பின் தீவிரவாதத்தின் பொய்யான நம்பிக்கைகள் களையப்படும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி நியூயார்க்கின் உலக வர்த்தக மையம் தாக்கப்படுவதற்கு மூளையாகச் செயல்பட்ட பின் லேடன், மே ஒன்றாம் தேதி பாகிஸ்தானில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் துருப்புகளால் கொல்லப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.