2011-05-02 16:07:49

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒவ்வொரு மனிதனின் மாண்பு பாதுகாக்கப்படுவதற்கு உண்மையிலேயே உழைத்தவர் - திருப்பீடச் செயலர்


மே02,2011. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், விசுவாச மனிதர், கடவுள் மனிதர், கடவுள் மனிதராகிய இவரது வாழ்க்கை முழுவதும் இடைவிடாத செபத்தால் அமைந்திருந்தது, அச்செபத்தில் இப்பூமியின் ஒவ்வொரு மனிதனையும் நினைவுகூர்ந்தார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டதையொட்டி இத்திங்கள் காலை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்த்திய கர்தினால் பெர்த்தோனே, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒவ்வொரு மனிதனின் மாண்பு பாதுகாக்கப்படுவதற்கு உண்மையிலேயே உழைத்தவர் என்றார்.
முப்பது கர்தினால்கள், சுமார் 800 அருட்பணியாளர்கள் உட்பட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் விசுவாசிகள் கலந்து கொண்ட இந்நன்றித் திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அரசியல் மற்றும் சமூகக் கருத்துக் கோட்பாடுகளுக்காக மட்டும் போராடவில்லை, மாறாக, இனம், நிறம், மதம், மொழி என்ற பாகுபாடின்றி ஒவ்வொரு மனிதனின் மாண்பு காக்கப்படுவதற்காகப் போராடியவர், இவர் மற்ற மனிதரை “எனது மறுபக்கம்” என்று எழுதியிருப்பதிலிருந்து இது தெரிகின்றது என்றார் அவர்.
நாம் கிறிஸ்தவ விசுவாசத்தை எவ்வாறு வாழ வேண்டும், கிறிஸ்தவ விழுமியங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தவர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் என்றும் கர்தினால் பெர்த்தோனே புகழ்ந்தார்.
இத்தகைய சாட்சிய மனிதரைக் கடவுள் நமக்கு வழங்கியதற்காக இன்று இறைவனுக்கு நன்றி சொல்லுவோம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், எக்காலத்திலும் இருந்ததைவிட அவர் காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு இருக்கும் நன்னெறி சார்ந்த அதிகாரத்தை உறுதிப்படுத்தினார் என்றும் இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டு நிகழ்ச்சிகளின் வழியாக புதிய நற்செய்திப்பணிக்கான உந்துதலை அளித்தார் என்றும் பாராட்டினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே.








All the contents on this site are copyrighted ©.