2011-05-01 14:17:35

அருளாளர் இரண்டாம் ஜான்பாலுக்கான பட்டமளிப்புத் திருப்பலி


மே 1,2011. மே 1ம் தேதி ஞாயிறு காலை உரோம் நகரில் திருவிழாக்கூட்டம் தான். திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகள் உரோம் நகர் வந்துள்ளதால் வத்திக்கானுக்கு சில கிலோமீட்டர் சுற்றளவில் எவ்வித வாகனங்களும் செல்ல முடியா நிலை. ஆகவே திருப்பயணிகள் கூட்டம் கூட்டமாய் தங்கள் குழுவுக்குரிய கொடிகளையும் பாப்பிறைக் கொடிகளையும் தாங்கி புனித பேதுரு பேராலய வளாகம் நோக்கி கூட்ட நெரிசலில் மெதுவாக அடியெடுத்து வந்தனர். 10 மணிக்கு தான் திருத்தந்தையின் திருப்பலி எனினும், காலை 5 மணிக்கே வத்திக்கானைச் சுற்றி பெருமளவான கூட்டம். பலர் சாலையோரங்களில் தூங்கியே இரவைக் கழித்தனர். திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இறப்பிற்கு பின் தற்போதுதான் உரோம் நகரம் இத்தகையதோர் கூட்டத்தைக் காண்கிறது. திருப்பலிக்கும் இரண்டு மணி நேரம் முன்பாகவே ஜெப வழிபாடுகள் துவங்கின. இந்த ஜெப வழிபாட்டில், திருத்தந்தை 2ம் ஜான் பால் பல்வேறு வேளைகளில் வழங்கிய உரைகளின் சில பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு சில மொழிகளில் வாசிக்கப்பட்டன. ஆசிய மொழிகளில் தமிழ் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தது நமக்குப் பெருமை தானே. உலகின் முக்கிய மொழிகள், தொன்மை மொழிகள் என வழிபாட்டிற்குத் தேர்வு செய்யும்போது, திருப்பீடம் எப்போதும் தமிழையும் தேர்வு செய்வது வரலாறு கண்டு வரும் உண்மை.
உரோம் நேரம் 10 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தைத் திறந்த காரில் வலம் வந்து திருப்பலி மேடையேறிய திருத்தந்தை, திருப்பலியைத் துவக்கியபோது உள்ளூர் நேரம் 10மணி 15 நிமிடங்கள். அப்போது இந்திய நேரம் பகல் 1 மணி 45 நிமிடங்கள். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பெரிய ஒலிபெருக்கிகள் மற்றும் பெரிய தொலைக்காட்சி திரைகள் மூலம் திருப்பலி மக்களுக்குக் கொணரப்பட்டது.
திருப்பலியில் இத்தாலிய அரசுத்தலைவர், பிரதமர், போலந்து முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள், ஜிம்பாப்வே அரசுத்தலைவர் உட்பட 16 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய அரசக்குடும்பத்தினர்களும் கலந்து கொண்டனர்.
திருத்தந்தையின் உரோம் மறைமாவட்டத்திற்கான பிரதிநிதி கர்தினால் அகொஸ்தினோ வல்லினி, முன்னாள் திருத்தந்தையின் வாழ்க்கை வரலாற்றை வாசித்து, அவரை அருளாளராக அறிவிக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்டிடம் விண்ணப்பத்தை முன் வைக்க, திருத்தந்தையும் அவரை அருளாளராக அறிவித்தார்.
திருத்தந்தை 2ம் ஜான் பாலின் விழா அக்டோபர் 22ந்தேதி எனவும் அறிவித்தார் திருத்தந்தை. திருத்தந்தை 2ம் ஜான் பால் 1978ம் ஆண்டு திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாள் அக்டோபர் 22 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அருளாளர் இரண்டாம் ஜான் பாலின் பெரியதொரு உருவப்படம் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய முகப்பில் திறக்கப்பட்டது. மக்களின் ஆராவாரமும் கைதட்டலும் உச்ச நிலையை அடைந்து பல நிமிடங்கள் நீடித்தன.
இதன் பின்னர், முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உடல் நலம் குன்றிய நிலையில் உரோம் நகரின் ஜெமல்லி மருத்துவமனையில் இருந்தபோது எடுத்துவைக்கப்பட்டடிருந்த அவரின் சிறிதளவு இரத்தம் அடங்கிய சிறு பேழையை அருள்சகோதரிகள் தொபியானாவும், மரி சிமோன் பியேரும் எடுத்துச்சென்று திருத்தந்தையிடம் மேடையில் வழங்கினர். பின்னர் அது திருப்பலி மேடையருகே வைக்கப்பட்டது. இந்தப் புனிதப்பொருள் மக்களின் தரிசனத்திற்கென கோவிலில் வைக்கப்படும். அருள்சகோதரி தொபியானா, திருத்தந்தை 2ம் ஜான் பாலின் இறுதி காலத்தில் அவருக்குப் பணிவிடை புரிந்தவர். அருட்சகோதரி சிமோன் பியேர், திருத்தந்தையிடம் வேண்டியதால் குணம் பெற்றவர்.
திருத்தந்தை 2ம் ஜான் பாலின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பெட்டி கல்லறையிலிருந்து எடுக்கப்பட்டு தற்போது புனித பேதுரு பசிலிக்காப் பேராயத்தினுள் மக்களின் பார்வைக்கென வைக்கப்பட்டுள்ளது.
திருப்பலியில் 1000க்கும் மேற்பட்ட குருக்கள் கலந்துகொண்டனர். ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் இடம் பெற்ற திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை, திருப்பயணிகளோடு இணைந்து பாஸ்கா காலத்து மூவேளை செபத்தையும் செபித்து, உரை ஒன்றும் வழங்கினார். பல்வேறு மொழிகளில் வழங்கப்பட்ட இவ்வுரை அனைவருக்குமான நன்றியறிவுப்பு உரையாக இருந்தது.
உள்ளூர் நேரம் 12.45 மணிக்கு அருளாளர் பட்டமளிப்பு விழாச் சடங்குகள் பாஸ்கா காலத்து மூவேளை செப உரையுடன் நிறைவுக்கு வந்தன. அப்போது இந்திய நேரம் மாலை 4 மணி 15 நிமிடம்.
அன்புள்ளங்களே! உலகின் அமைதிக்காவும், குழந்தைகளுக்காகவும், முதியோருக்காகவும், நோயாளிகளுக்காகவும் சிறப்பான விதத்தில் நம் புதிய அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பாலின் பரிந்துரையை வேண்டுவோம். நம் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றும் அமைதியான செபம் ஒன்றிணைந்து இறைவனை நோக்கி எழும்பட்டும்.








All the contents on this site are copyrighted ©.