2011-05-01 14:17:17

அருளாளர் இரண்டாம் ஜான்பாலுக்கான திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் மறையுரை


அன்புச் சகோதர சகோதரிகளே,
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வளாகத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களது அடக்கச் சடங்கிற்காகக் கூடியிருந்தோம். அவரது மறைவு நமக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தாலும், அப்போது நாம் பெற்ற அளப்பரிய திருவருள் உணர்வானது உரோம் மாநகரையும் அகில உலகத்தையும் நிறைத்தது. இந்த அருளானது எனது அன்புக்குரிய முந்தைய திருத்தந்தையின் வாழ்க்கை முழுவதும், குறிப்பாக அவரது துன்பங்களில் வெளிப்பட்ட சாடசியத்தின் கனியாகும். நாம் அவரின் தூய்மைத்துவத்தின் நறுமணத்தைப் பெற்றிருக்கிறோம். இதனை இறைமக்கள் பல வழிகளில் அவர் மீதான வணக்கத்தில் வெளிப்படுத்தினார்கள். இந்தக் காரணங்களுக்காக, திருச்சபையின் சட்ட விதிமுறைகளுக்கு உகந்த மரியாதை கொடுத்து அவரை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான படிநிலைகளை முன்னெடுப்பதற்கு நான் அனுமதித்தேன். வெகு காலமாகக் காத்திருந்த அந்த நாள் வந்துள்ளது. அந்த நாளும் விரைவாக வந்துள்ளது. இரண்டாம் ஜான் பால் அருளாளர் என்பது நம் ஆண்டவருக்கும் விருப்பமானதாக இருக்கின்றது.

இவ்வாறு மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இத்திருப்பலியில் கலந்து கொள்ளும் எல்லாருக்கும் தனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்து மேலும் தொடர்ந்தார்.

இன்று கிறிஸ்து உயிர்ப்பின் இரண்டாம் ஞாயிறு. இது அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அர்ப்பணித்த இறைஇரக்க ஞாயிறாகும். இந்த விழாவின் திருவிழிப்பின் போது எனக்கு முந்தைய இத்திருத்தந்தை இறந்ததால் இந்தக் கொண்டாட்டத்திற்கு இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று அன்னைமரியாவின் மாதமாகிய மே மாதத்தின் முதல் நாள் மற்றும் தொழிலாளரான புனித வளனாரின் விழா. இவை அனைத்தும் நமது செபங்களை வளப்படுத்துகின்றன. காலம் காலமாகத் தொடரும் நம் திருப்பயணத்தில் நமக்கு உதவுகின்றன. ஆயினும் விண்ணகத்தில் தூதர்கள் மற்றும் புனிதர்கள் மத்தியில் வேறு ஒரு விழா இன்று நடைபெறுகின்றது. கடவுள் ஒருவரே. அவரே மண்ணகத்தை விண்ணகத்தோடு இணைக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

“கண்டதால் அல்ல, காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்”(யோவா.20:29). இன்றைய நற்செய்தியில் இயேசு அறிவிக்கும் இந்தப் பேறு, விசுவாசத்தின் பேறு ஆகும். இன்று அருளாளர் நிலையைக் கொண்டாடக் கூடியிருக்கும் நமக்கு இந்தப் பேறுபெற்றோர் என்ற கூற்று மிகவும் உள்ளத்தைத் தொடுவதாக இருக்கின்றது. இன்னும், இது இன்று மிக முக்கியமாக இருக்கின்றது. ஏனெனில் இன்று அருளாளர் என்று அறிவிக்கப்பட்டிருப்பவர் ஒரு திருத்தந்தையாவார். இவர் தூய பேதுருவின் பாதையில் நின்று தமது சகோதரரை விசுவாசத்தில் உறுதிப்படுத்த அழைக்கப்பட்டவர். இரண்டாம் ஜான் பால் தமது விசுவாசத்திற்காக, உறுதியான, தாராளமான மற்றும் அப்போஸ்தலிக்க விசுவாசத்திற்காக அருளாளராக இருக்கிறார். மற்றுமொரு பேறுபெற்றோர் கூற்றையும் நாம் இன்று உடனே நினைக்கிறோம். “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்”(மத்.16:17). என்று இயேசு, சீமோனிடம் கூறியதே அக்கூற்று. நமது வானகத்தந்தை சீமோனிடம் வெளிப்படுத்தியது என்ன? இயேசுவே கிறிஸ்து, இவரே உயிருள்ள கடவுளின் மகன் என்பதே. இந்த விசுவாசத்திற்காகவே சீமோன் பேதுருவானார். பேதுரு என்ற பாறையின் மீதே இயேசு தமது திருச்சபையைக் கட்ட முடிந்தது. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் நித்திய பேறாக இன்று திருச்சபை அகமகிழ்ச்சியோடு அறிவிக்கும் அனைத்தும், “சீமோனே, நீ பேறு பெற்றவன்” என்பதிலும், “கண்டதால் அல்ல, காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்பதிலும் உள்ளடங்கியிருக்கின்றது. இந்த விசுவாசப் பேற்றை, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கிறிஸ்துவின் திருச்சபையைக் கட்டுவதற்குத் தந்தையாம் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றார்.

இப்பொழுது நமது எண்ணங்கள் மற்றுமொரு பேறுபெற்றோர் பக்கம் திரும்புகின்றது. இது மற்ற பேறுபெற்றோர் அறிவிப்புக்களுக்கு முன்னரே நற்செய்தியில் காணப்படுகின்றது. இது மீட்பரின் தாய் கன்னிமரியாவைப் பற்றிய பேறு ஆகும். மரியா, இயேசுவைக் கருத்தாங்கியிருந்த சமயத்தில், எலிசபெத்து, மரியாவிடம், “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். (லூக்.1:45). விசுவாசத்தின் பேறு மரியாவில் தனது மாதிரிகையைக் கொண்டிருந்தது. மரியாவின் மாதமாகிய இந்த மாதத்தின் முதல் நாளில் ஜான் பால் அவர்கள் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட நிகழ்ச்சி இடம் பெற்றதற்கு நாம் எல்லாரும் மகிழ்ச்சியடைகின்றோம். மரியா, தமது தாய்க்குரிய பாசத்தால் திருத்தூதர்களையும் அவர்களின் வழிவருவோரையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறார். கிறிஸ்துவின் உயிர்ப்புக் குறித்த நிகழ்வுகளில் மரியா இடம் பெறவில்லையெனினும் அவரின் மறைவான பிரசன்னம் தொடர்ந்து இருக்கின்றது. இயேசு அவரிடம் ஒப்படைத்தத் தம் சீடர்கள் ஒவ்வொருவருக்கும் முழு மானிடச் சமூகத்திற்கும் தாயாக இருக்கிறார்.

இன்றைய இரண்டாவது வாசகமும் விசுவாசம் பற்றியே பேசுகின்றது. தூய பேதுரு ஆன்மீக ஆர்வத்தால் உந்தப்பட்டு புதிதாகத் திருமுழுக்குப் பெற்றவர்களின் நம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்குமான காரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அவர், “பேருவகை கொள்வீர்கள்” என்றும், “அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள், இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை. எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்”(1பேது. 1:6, 8-9) என எழுதியிருக்கிறார். இ்வ்வுண்மைகள் அனைத்தும் கிறிஸ்துவின் உயிர்ப்பில் வெளியாகின. “இதுவே நம் ஆண்டவரின் செயல், இது நம் கண்களுக்கு வியப்பே” என்று திருப்பாடலும்(118,23) சொல்கிறது.

அன்புச் சகோதர சகோதரிகளே, உயிர்த்த கிறிஸ்துவின் முழுமையான ஆன்மீக ஒளி கொண்டு இன்று நம் கண்கள் அன்பும் மதிப்பும் மிக்க இரண்டாம் ஜான் பால் அவர்களை நோக்குகின்றன. இன்று அவரது பெயர், அவர் தமது 27 வருடப் பாப்பிறைப் பணிக் காலத்தில் அறிவித்த புனிதர்கள் மற்றும் அருளாளர்கள் பெயர்களுடன் இணைகின்றது. திருச்சபை பற்றிய இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கக் கொள்கைத் திரட்டு போதிக்கும், தூய்மைத்துவத்திற்கு அழைப்பு விடுக்கும் கிறிஸ்தவ வாழ்வு வாழ அனைவரும் அழைக்கப்படுவதை வலியுறுத்துகிறது. ஆயர்கள், அருட்பணியாளர்கள், தியோக்கோன்கள், பொதுநிலையினர், இருபால் துறவியர் என இறைமக்கள் சமுதாயமாகிய நாம் அனைவரும், நமக்கு முன்னர் நம் கன்னிமரியா சென்றுள்ள விண்ணக வீடு நோக்கிய பயணத்தைத் தொடருகின்றோம்.

கரோல் வொய்த்திவா, முதலில் கிராக்கோவின் துணை ஆயராகவும் பின்னர் பேராயராகவும் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் கலந்து கொண்டார். திருச்சபை பற்றிய கொள்கைத் திரட்டின் இறுதி அத்தியாயத்தை மரியாவுக்கு அர்ப்பணிப்பதற்கான இப்பொதுச் சங்கத்தின் தீர்மானம், மீட்பரின் தாய் ஒவ்வொரு கிறிஸ்தவர் மற்றும் முழுத் திருச்சபையின் புனித வாழ்வுக்கு அடையாளமாகவும் எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார் என்பதை வலியுறுத்தவே என்பதை ஜான் பால் நன்றாகவே அறிந்திருந்தார். இந்த இறையியல் கண்ணோட்டத்தையே அருளாளர் இரண்டாம் ஜான் பால் இளைஞனாக இருக்கும் போதே கண்டறிந்து தமது வாழ்க்கை முழுவதும் பாதுகாத்து அதனை ஆழப்படுத்தினார். மரியாவோடு சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து இருக்கும் காட்சியை வெளிப்படுத்தும் உருவத்தையே அவர் தமது அருகில் வைத்திருந்தார். யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த அடையாளத்தையே கரோல் வொய்த்திவா தமது ஆயர் மரபுச் சின்னத்திலும் பின்னாளில் பாப்பிறை மரபுச் சின்னத்திலும் எடுத்திருந்தார். அந்தச் சின்னத்தில் கீழே வலதுபுறத்தில் தங்கநிறச் சிலுவையோடு “M” என்ற எழுத்து இருந்தது. கரோல் வொய்த்திவா தமது வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியாக புனித Louis Marie Grignion de Montfortன் “Totus tuus” என்ற புகழ்பெற்ற வார்த்தைகளையே கண்டுபிடித்து அவற்றை விருதுவாக்காகவும் கொண்டிருந்தார். “மரியா, நான் முழுவதும் உமக்குரியவன். என்னிடம் உள்ளவை அனைத்தும் உம்முடையது. எனது எல்லாவற்றுக்கும் உம்மையே பின்பற்றுகிறேன். ஓ மரியா, உமது இதயத்தைக் கொடுத்தருளும்” என்ற வார்த்தைகளே அவரது வாழ்வுக்கு விளக்காக இருந்தன.

நமது புதிய அருளாளர் தமது உயிலில் இவ்வாறு எழுதியிருக்கிறார். “1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பாப்பிறைத் தேர்வுக்கானக் கர்தினால்கள் அவை போலந்து திருச்சபைத் தலைவரான இரண்டாம் ஜான் பாலைத் தேர்ந்தெடுத்த போது, கர்தினால் Stefan Wyszynski, “திருச்சபையை மூன்றாம் மில்லென்யத்திற்குக் கொண்டு போக வேண்டியது புதிய திருத்தந்தையின் வேலை” என்று என்னிடம் சொன்னார். இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் எனும் மாபெரும் கொடையை வழங்கியதற்காக நான் மீண்டும் ஒருமுறை தூய ஆவிக்கு நன்றி சொல்கிறேன். இதற்கு நானும் ஆயர் குழுவும் அகிலத் திருச்சபையும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக உணருகிறேன். இப்பொதுச் சங்கத்தில் ஆயராக, தொடக்க நாள் முதல் கடைசி நாள் வரைக் கலந்து கொண்டேன். இந்தப் பெரும் பாரம்பரியச் சொத்தை இன்று வாழும் மற்றும் வருங்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்த அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன். எனது பங்காக, இந்த எனது பாப்பிறை காலம் முழுவதும் இந்தப் பெரும் காரணத்திற்காகத் தொண்டு புரிய என்னை அழைத்த நித்திய மேய்ப்பருக்கு நன்றி செலுத்துகிறேன்.”

இந்தக் “காரணம்” என்பது என்ன? இரண்டாம் ஜான் பால் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நிகழ்த்திய முதல் ஆடம்பரத் திருப்பலியில் அவர் சொன்ன மறக்க முடியாத வார்த்தைகளே இதற்கு விளக்கம் அளிக்கின்றன. அதாவது அஞ்சவேண்டாம். கிறிஸ்துவுக்கு உங்கள் கதவுகளை அகலத் திறந்து விடுங்கள்!” என்பதே அவ்வார்த்தைகள். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பிறை ஒவ்வொருவரையும் கேட்பது என்ன? அதை அவரே முதலில் செய்து காட்டினார். கடவுளிடமிருந்து கிடைத்த வல்லமையைக் கொண்டு சமூகம், கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புக்களை கிறிஸ்துவுக்குத் திறந்து விட்டார். போலந்தின் அசாதாரண மகனான இவர் தமது விசுவாசம், அன்பு மற்றும் அப்போஸ்தலிக்க வலிமையினால், உலகெங்கும் வாழும் விசுவாசிகள், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட பயப்படாமல் இருப்பதற்கு உதவினார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், உண்மைக்குப் பயப்படாமல் இருக்க அவர் உதவியுள்ளார். ஏனெனில் உண்மையே சுதந்திரத்திற்கு உத்தரவாதம் வழங்குகின்றது. இரத்தினச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதற்குப் பலத்தை அளித்தார். ஏனெனில் கிறிஸ்துவே மனிதரின் மீட்பர். இதுவே அவரது முதல் திருமடலின் தலைப்பாகும். இதுவே அவரது மற்ற திருமடல்களிலும் பிரதிபலித்தது.

கரோல் வொய்த்திவா, பேதுருவின் அரியணையில் அமர்ந்த போது மார்க்சீயத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையேயான ஆழமானப் புரிந்து கொள்ளுதலை அந்தந்த மனிதரின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கொண்டு வந்தார். மனிதன் திருச்சபையின் வழியாகும். கிறிஸ்துவே மனிதனின் வழி என்ற செய்தியையே அவர் கொண்டு வந்தார். இச்செய்தி, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் மற்றும் அச்சங்கத்தை இயக்கிய இறையடியார் ஆறாம் பவுலின் மரபுரிமைப் பண்பாகவும் இருந்தது. இச்செய்தியோடு இரண்டாம் ஜான் பால் இறைமக்களை மூன்றாம் மில்லென்யத்திற்குக் கொண்டு வந்தார். ஜூபிலி ஆண்டின் நீண்ட தயாரிப்புக்களின் போது அவர் கிறிஸ்தவத்தை மீண்டும் வருங்காலம் நோக்கி நடத்தினார். கிறிஸ்தவம், நம்பிக்கையின் மதம் என்ற அதன் உண்மையான முகத்தைக் காத்தார். நீதியும் அமைதிக்குமான நமது தேடல் நிறைவேறுவதற்குக் கிறிஸ்துவிடம் நம்மை வழிகாட்டினார்.

இறுதியாக எனது சொந்த அனுபவத்திலிருந்தும் சொல்ல விரும்புகிறேன். அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களுடன் இணைந்து பல ஆண்டுகள் நான் வேலை செய்யக் கிடைத்த கொடைக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். நான் அவரை முன்பே அறிந்து அவர் மீது மதிப்புக் கொண்டிருந்தாலும், விசுவாசக்கோட்பாட்டுத் திருப்பேராயத் தலைவராக அவர் உரோமைக்கு என்னை அழைத்த 1982ம் ஆண்டிலிருந்து 23 ஆண்டுகள் நான் அவரருகில் இருந்துள்ளேன். எனது பணியும், அவரது ஆழமான ஆன்மீகம் மற்றும் வளமையான தூண்டுதல்களால் வழிநடத்தப்பட்டது. அவரது செப வாழ்வு தொடர்ந்து என்னில் தாக்கத்தை ஏற்படுத்தி வழிநடத்தியது. அவரது பணியின் பல சவால்கள் மத்தியிலும் அவர் கடவுளோடு ஆழமாக ஒன்றித்திருந்தார். கடவுள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டாலும் அவரது வேதனைகளில் கிறிஸ்து விரும்பியது போல அவர் பாறையாக இருந்தார். கிறிஸ்துவோடு நெருங்கிய பிணைப்பில் அடித்தளமிடப்பட்ட அவரது மிகுந்த தாழ்ச்சிப் பண்பு, திருச்சபையையும் உலகையும் வழிநடத்த உதவியது. அவரது உடல், பலவீனம் அடைந்த போது இதனைத் தெளிவாகக் காண முடிந்தது. இவ்வாறு இயேசுவோடு முழுவதும் ஒன்றித்து வாழ்ந்ததன் மூலம் அவர் தனது குருத்துவ மற்றும் ஆயர் பணி அழைப்பை மிகச்சிறந்த விதத்தில் வாழ்ந்தார். இது ஒவ்வொரு குருவுக்கும் ஆயருக்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றது.
அன்புமிக்க திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், நீவீர் பேறு பெற்றவர். ஏனெனில் நீர் விசுவசித்தீர். இறைமக்களின் விசுவாசத்தை விண்ணகத்திலிருந்து காக்குமாறு தொடர்ந்து நாங்கள் உம்மிடம் செபிக்கின்றோம். ஆமென்.







All the contents on this site are copyrighted ©.