2011-04-30 15:46:03

மே 01,2011 இஞ்ஞாயிறன்று இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அருளாளர் என்று அறிவிக்கப்படுகிறார்


ஏப்ரல்30,2011. மே ஒன்றாந்தேதி இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் நடைபெறும் ஆடரம்பத் திருப்பலியில் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் அருளாளர் என்று அறிவிக்கப்படவுள்ளார்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களே அறிவித்த இறைஇரக்க ஞாயிறு பெருவிழாத் திருப்பலியில் அவரை முத்திப்பேறு பெற்றவராக அதாவது அருளாளராக அறிவிப்பார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு இறைஇரக்கப் பக்திச் செபங்கள் தொடங்கும். அதைத் தொடர்ந்து பத்து மணிக்கு விழாத் திருப்பலி ஆரம்பமாகும்.
“உரோம் நகரின் உரோமையராக” வாழ்ந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களை உரோம் மாநகராட்சி பல விதங்களில் கௌரவித்துள்ளதைக் காண முடிகின்றது. திரும்பிய பக்கமெல்லாம் அவரின் படங்களையும் அவரின் வார்த்தைகளையும் ஒட்டியுள்ளது உரோம் மாநகராட்சி நிர்வாகம்.
இத்திங்கள் காலை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் நன்றித் திருப்பலி நிகழ்த்துவார்.
1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற நம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 1929ல் எமிலியா என்ற தனது தாயை இழந்தார். தனது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932ல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941ல் இழந்தார். ஜெர்மன் நாத்சிகளின் ஆக்ரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939ல் மூடப்பட்டது. எனவே ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் கல் குவாரியிலும் பின்னர் சொல்வாய் வேதியத் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946ல் குருவானார். 1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். இவர் அக்டோபர் 22ம் தேதி தனது பாப்பிறைப் பணியைத் தொடங்கினார். 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறைவனடி சேர்ந்தார். இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அருளாளர் என்று இஞ்ஞாயிறன்று அறிவிக்கப்படுவார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 14 திருமடல்கள், 15 அப்போஸ்தலிக்க மடல்கள், 11 அப்போஸ்தலிக்கத் திருச்சட்ட வரைவுகள், 45 அப்போஸ்தலிக்கக் கடிதங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார் இத்தாலிக்கு வெளியே 146 திருப்பயணங்களை மேற்கொண்டார். உரோம் ஆயர் என்ற முறையில் உரோமின் 332 பங்குகளில் 317ஐ பார்வையிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.