2011-04-30 15:45:05

ஊடகவியலார், எப்பொழுதும் உண்மைக்குப் பிரமாணிக்கமாக இருக்குமாறு திருத்தந்தை அழைப்பு


ஏப்ரல்30,2011. மனித சமுதாயத்திற்கான தனது மிக முக்கிய செய்திகளை எல்லைகளைக் கடந்து வானொலி வழியாகத் திருத்தந்தை வழங்க முடிகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இரண்டாம் உலகப் போரின் போது திருத்தந்தை 12ம் பத்திநாதர் நீதிக்கும் அமைதிக்குமெனத் தனது குரலை உயர்த்தியது, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் முன்னாள் சோவியத் யூனியனுக்குமிடையே நிலவிய பிரச்சனையின் உச்சகட்டத்தில் 1962ல் திருத்தந்தை 23ம் ஜான் செயல்பட்டது ஆகிய இவை போன்ற முக்கிய செயல்களுக்கு வானொலி உதவியாக இருந்தது என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் வானொலியின் 80வது ஆண்டை முன்னிட்டு வத்திக்கானில் நடைபெற்ற ஐரோப்பிய வானொலி மற்றும் தொலைக்காட்சி கழகத்தின் 17வது கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 150 பேரை இச்சனிக்கிழமை காலை காஸ்தெல் கன்டோல்போவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஊடகவியலார், ஒவ்வொரு நாளும் நடக்கும் விடயங்கள் பற்றிப் பொதுமக்கள் புரிந்து கொள்வதற்கு உதவும் பொதுநலத் தொண்டு செய்பவர்கள் என்று கூறிய அவர், இதில் இவர்கள் எப்பொழுதும் உண்மைக்குப் பிரமாணிக்கமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
சமூகத் தொடர்பு சாதனங்கள், உரையாடல் அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுவதாய்ச் செயல்படுமாறும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.