2011-04-29 15:22:02

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெட்டி மூடிய நிலையில் தூய பேதுரு கல்லறைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது


ஏப்ரல்29,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களது கல்லறை இவ்வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டு அவர் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெட்டியானது அப்படியே மூடிய நிலையில் தூய பேதுரு கல்லறைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதாகத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் உடல் மூன்றடுக்குப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. முதல் பெட்டி மரத்தாலானது. அது அவர் அடக்கம் செய்யப்பட்ட திருப்பலியின் போது எல்லாரும் பார்த்தது. இரண்டாவது பெட்டி ஈய உலோகத்தாலானது. மூன்றாவது பெட்டி மரத்தாலானது.
இந்தச்சவப் பெட்டியை வெளியே எடுத்த வேலையானது இவ்வெள்ளி அதிகாலை தொடங்கப்பட்டது. காலை 9 மணி வரை வெளியே வைக்கப்பட்டு, கர்தினால் கொமாஸ்திரி, கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் திஷ்விஷ், அத்திருத்தந்தைக்கு உதவி செய்த அருட்சகோதரிகள் உட்பட சில திருப்பீட உய்ர அதிகாரிகள் செபித்தனர். பின்னர் அது தூய பேதுரு கல்லறைக்கு முன்பாகக் கொண்டு வரப்பட்டு, தங்கநிற வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய துணியால் மூடப்பட்டது.
அவ்விடத்தில் ஞாயிறு காலை வரை வைக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படும் திருப்பலியின் போது பசிலிக்காவின் மையப்பகுதிக்கு எடுத்து வரப்பட்டு அச்சடங்கு முடிந்த பின்னர் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கும் விசுவாசிகளுக்குமெனக் கொடையாக வழங்கப்படும். எனினும் தற்போது பசிலிக்காவின் கல்லறைப் பகுதிக்கு பொது மக்கள் செல்லாதவாறு அது அடைக்கப்பட்டுள்ளது.
மே 2 திங்கள் மாலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா அடைக்கப்பட்ட பின்னர் அருளாளரின் இப்பெட்டி புனித செபஸ்தியார் பீடத்தில் வைக்கப்படும். இப்பீடம் பியட்டா அன்னைமரியா பீடத்துக்கு அடுத்து இருக்கின்றது. திருத்தந்தையின் கல்லறையை தினமும் சுமார் இருபதாயிரம் பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.