2011-04-28 15:00:35

ஏப்ரல் 29 வாழ்ந்தவர் வழியில்.....


ராஜா ரவி வர்மா, நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேலை நாடுகளின் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். இவர் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கிளிமானூர் என்னும் ஊரில் 1848ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார். இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்கள் பற்றிய சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868ல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையையும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித் தந்தது.
பேரரசர் மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பையில் கழித்தார். அங்கு 1894ல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1873ல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அவற்றுக்குச் சிறப்பான விருதையும் அவர் பெற்றார். 1906ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தனது 58வது வயதில் இறைவனடி சேர்ந்தார் ராஜா ரவி வர்மா.







All the contents on this site are copyrighted ©.