2011-04-28 15:55:21

4. அமல அவை அருட்சகோதரிகளின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர்


ஏப்ரல் 28,2011. தமிழ் நாட்டைச் சேர்ந்த அமல அவை அருட்சகோதரிகளின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர் சால்வதோரே பென்னாக்கியோ கலந்து கொண்டார்.
கடந்த மூன்று நாட்களாய் மதுரையில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் இறுதியில் இத்துறவுச் சபையின் நூறு ஆண்டுகளுக்கான சேவைகளை விளக்கும் கண்காட்சியை பேராயர் பென்னாக்கியோ திறந்து வைத்தார்.
இப்புதனன்று நடைபெற்ற இறுதி நாள் நிறைவு விழாவில் பேராயர் பென்னோக்கியோ, பல ஆயர்கள், குருக்கள் ஆகியோருடன் நிர்மலா பள்ளி வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தினார். விழாவின் ஒரு பகுதியாக, நூற்றாண்டு விழா நினைவு மலர் மற்றும் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன.
600க்கும் அதிகமான அருட்சகோதரிகள் கலந்து கொண்ட இவ்விழாவில் இச்சபையை நிறுவிய அருள்தந்தை அகஸ்டின் பெரேரா குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் சிலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.1911ம் ஆண்டு அருள்தந்தை அகஸ்டின் மற்றும் இயேசுசபை குருக்கள் யூஜின், ஜூலியஸ் ஆகிய மூவராலும் இத்துறவறச் சபை நிறுவப்பட்டது. தற்போது தமிழ் நாடு, பீகார், ஜார்க்கன்ட், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளிலும், தென் ஆப்ரிக்கா, சாம்பியா, இலங்கை, இத்தாலி ஆகிய நாடுகளிலும் 1000 அருட்சகோதரிகளுக்கும் மேலாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.