2011-04-28 15:54:37

1. திருச்சபையின் கருத்துக்களைப் பரப்புவதில் வானொலியின் ஒரு முக்கிய பங்கு - வத்திக்கான் அதிகாரி


ஏப்ரல் 28,2011. திருச்சபையின் கருத்துக்களைப் பரப்பும் ஒரு முக்கிய கருவியாக வானொலி இருக்கிறது; பல புதிய தொடர்புச் சாதனங்கள் வளர்ந்திருந்தாலும், வானொலிக்கென ஒரு முக்கிய பங்கு இன்றைய உலகிலும் உள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் வத்திக்கான் வானொலியும், ஐரோப்பிய வானொலி ஒன்றியமும் இணைந்து வத்திக்கானில் நடத்தும் ஒரு கருத்தரங்கின் துவக்க விழாவில் உரையாற்றிய சமூகத் தொடர்பு சாதனங்களுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli இவ்வாறு கூறினார்.
காலம் இடம் ஆகிய எல்லைகளைக் கடந்து, வானொலியின் செய்திகள் பல்வேறு புதியத் தொழில் நுட்பங்களின் உதவியால் பல கோடி மக்களை ஒவ்வொரு நாளும் அடைந்து வருகிறதென்று பேராயர் செல்லி சுட்டிக் காட்டினார்.
பிற பணிகளில் ஈடுபட்டிருக்கும்போதும் நாம் வானொலியைக் கேட்கும் வசதி இருப்பதால், தாராள மனம் கொண்ட ஒரு கருவியாக வானொலியை நாம் காணலாம் என்று கூறிய பேராயர், இவ்வூடகத்தினால் நமது சிந்தனைகள் மெருகேறும் வாய்ப்பு அதிகம் உள்ளதென்று எடுத்துரைத்தார்.
அனைத்தையும் அவசரமாக ஆற்றும் வலிமை கொண்ட பல ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு இடையே, வானொலி இன்னும் நம்மை சிந்திக்கவும், தியானிக்கவும் அழைக்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறதென்று பேராயர் சுட்டிக் காட்டினார்.எந்த ஒரு தொடர்புத் துறையிலும் பணிபுரிவோர் உண்மை, முற்சார்பற்ற நடுநிலையான நிலை இவைகளின் அடிப்படையில் தங்கள் செய்திகளையும், கருத்துக்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்வதே உலகில் உண்மை மற்றும் நல்ல மதிப்பீடுகளை நிலை நிறுத்தும் ஒரு வழி என்று பேராயர் தன் உரையில் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.