2011-04-27 16:42:22

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி இவைகளுக்குப் பின் ஆஸ்பஸ்டாஸ் வடிவில் எழுந்துள்ள ஆபத்து


ஏப்ரல் 27,2011. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவைகளால் உண்டான அழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் தற்போது ஆஸ்பஸ்டாஸ் வடிவில் ஆபத்து எழுந்துள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மார்ச் மாதம் 11ம் தேதி ஜப்பானைப் பெரும் அழிவுக்குள்ளாக்கிய இயற்கைப் பேரிடர்கள், அதைத் தொடர்ந்த அணுக்கதிர் வீச்சு ஆபத்து இவைகளின் மத்தியில் ஆஸ்பஸ்டாஸ் குறித்த ஆபாயங்களில் மக்களின் கவனம் அதிகம் செலுத்தப்படவில்லை.
தற்போது, கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஆஸ்பஸ்டாஸ் நுண்ணிழைகளின் ஆபத்து அதிகரித்துள்ளதென்றும், நுரையீரலுக்குள் நேரடியாக நுழைந்து விடும் ஆபத்துள்ள இந்த நுண்ணிழைகளால் புற்று நோய் உட்பட்ட பல ஆபத்துக்கள் உள்ளன என்றும் இப்புதன் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.
இரண்டாம் உலகப் போரின் அழிவுகளுக்குப் பின் தன்னைக் கட்டியெழுப்பிய ஜப்பான், ஆஸ்பஸ்டாஸை அதிகம் நம்பியிருந்ததென்பதும், 1975ம் ஆண்டுக்குப் பின் இதன் ஆபத்தை உணர்ந்த ஜப்பான், அதை முற்றிலும் தடை செய்ததேன்பதும் குறிப்பிடத்தக்கது.எனினும் Sendai பகுதியில் 1970களில் கட்டப்பட்ட பல அடுக்குமாடி கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணி இப்போது நடைபெறுவதால், ஆஸ்பஸ்டாஸ் குறித்த ஆபத்தை அம்மக்கள் மீண்டும் சந்திக்க உள்ளனர் என்று இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.