2011-04-23 15:10:31

திருத்தந்தை:நொந்துபோன நமது இதயங்களின் திறந்த புத்தகத்தை கடவுள் வாசிக்கிறார்


ஏப்ரல்23, 2011. திருச்சபை மற்றும் மனித சமுதாயத்தின் இந்த இருளான நேரங்களில், நொந்துபோன நமது இதயங்களின் திறந்த புத்தகத்தை கடவுள் வாசிக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனிதவெள்ளி இரவில் உரோம் கொலோசேயத்தில் நடைபெற்ற திருச்சிலுவைப் பாதை பக்தி முயற்சியின் தொடக்கத்தில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
ஆயிரக்காணக்கான விசுவாசிகள் எரியும் மெழுகுதிரிகளுடன் கலந்து கொண்ட இப்பக்தி முயற்சியில், Palatine குன்றில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் முழங்கால்படியிட்டவண்ணம் திருத்தந்தை செபித்துக் கொண்டிருந்தார். இந்நிகழ்வின் இறுதியில் அவர் ஆற்றிய உரையில் மனித சமுதாயத்தின் பாவத்தால், தீமையினால், வேதனையால் அழுத்தப்பட்டு இயேசு அனுபவித்தப் பாடுகளை இந்த இரவில் நம் இதயத்தின் ஆழத்தில் மீண்டும் வாழ்ந்தோம், "சிலுவையில் அறையப்பட்ட மனிதனின்" உருவம், கடவுள் நம் ஒவ்வொருவர் மீதும் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பில் நம்பிக்கை வைக்குமாறு கேட்கிறது என்றார்.
மரணம், பாவம் மற்றும் தீமையின் மீதான வெற்றிக்கொடியல்ல சிலுவை, மாறாக, இது நம்மால் ஒருபோதும் எதிர்பார்த்திராத, நாம் கற்பனைசெய்யாத அளவுக்குக் கடவுளின் எல்லையற்ற அன்பின் அடையாளம் என்றார் திருத்தந்தை.
தரையில் விதை மடிவது போல, கடவுள்மகனின் மரணத்தில் வாழ்க்கையின் புதிய நம்பிக்கை விதையைக் கண்டு கொள்கிறோம் என்ற
திருத்தந்தை இன்று நாம் நம் விசுவாசத்தைப் புதுப்பிப்போம் என்றும் கூறினார்.
இவ்வாண்டு திருச்சிலுவைப் பாதையின் 14 நிலைகளுக்குமானத் தலைப்புகளை இத்தாலியச் சிறாரான 10 வயது திலெத்தாவும் 12 வயதும் மிக்கேலேயும் அறிவித்து தொடங்கி வைத்தனர். 5 குழந்தைகளைக் கொண்ட ஓர் எத்தியோப்பியக் குடும்பம், இரண்டு அகுஸ்தீன் சபை அருட்சகோதரிகள், எகிப்திலிருந்து ஓர் இளைஞன், சக்கரவண்டி.யில் இருந்த ஒரு மனிதர், புனிதபூமிக் காவலர்களான இரண்டு பிரான்சிஸ்கன் சபைக் குருக்கள் எனச் சிலர் இப்பக்தி முயற்சியில் திருச்சிலுவையை தூக்கிச் சென்றனர்.







All the contents on this site are copyrighted ©.