2011-04-23 15:11:40

இத்தாலியத் தொலைக்காட்சியில் விசுவாசம், துன்பம், போர் ஆகியவை குறித்த கேள்விகளுக்குத் திருத்தந்தை பதில்


ஏப்ரல்23,2011. உலகளாவியப் போர்கள், பல்சமய உறவுகள், மனிதத் துன்பங்கள் ஆகியவை குறித்த கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு இப்புனித வெள்ளி பிற்பகலில் இத்தாலியத் தொலைக்காட்சியில் பதில் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலிய Rai Uno தொலைக்காட்சியின் “A Sua Immagine” என்ற நிகழ்ச்சியில் இப்புனித வெள்ளி பிற்பகல் 2.10 மணி முதல் 3.30 மணி வரை திருத்தந்தை பங்கேற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பிறைகளின் வரலாற்றில் இவ்வாறு இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும்.
திருத்தந்தையிடம் கேட்பதற்கென வந்த ஆயிரக்கணக்கான கேள்விகளில் ஏழு கேள்விகள் மட்டும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றன.
இதில் இடம் பெற்ற எலேனா என்ற ஏழு வயது ஜப்பானியச் சிறுமியின் கேள்வி பலரது நெஞ்சை உருக்கியது. இவள் ஜப்பானில் அண்மை சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் பல நண்பர்களை இழந்தவள்.
“நான் ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும்? சிறார் ஏன் இவ்வளவு சோகமடைய வேண்டும்? கடவுளோடு பேசும் திருத்தந்தை இதற்கு எனக்குப் பதில் சொல்ல வேண்டும்” என்று அச்சிறுமி கேட்டாள். அதற்குத் திருத்தந்தை, இந்தத் துன்பம் வெறுமையாய்ப் போகாது, இதற்குப் பின்னால் ஒரு நல்ல திட்டம், ஓர் அன்புத் திட்டம் இருக்கின்றது, இதனை நீ ஒருநாள் உணர்வாய் என்று இச்சிறுமிக்குப் பதில் சொன்னார். மற்றவர்கள் நன்றாக வாழும் போது சிலர் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்ற இதே கேள்வியைத் தானும் வைத்திருப்பதாகவும் கூறினார். ஆனால் நம்மிடம் பதில் இல்லை. இயேசுவும் உன்னைப் போல மாசற்றவராகத் துன்புற்றார், இயேசுவில் தம்மை வெளிப்படுத்திய உண்மைக் கடவுள் உன்பக்கம் இருக்கிறார், உன்னோடு, துன்புறும் அனைத்து ஜப்பானியச் சிறாரோடு நாங்கள் இருக்கிறோம், நாங்கள் எங்களது செபத்தின் மூலம், பிறரன்புச் செயல்கள் மூலம் உதவி செய்ய விரும்புகிறோம் என்பதை உறுதியுடன் சொல்கிறேன், கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் என்பதில் நீ உறுதியாய் இருக்கலாம் என்றும் கூறினார்.
கோமா நிலையிலுள்ள தன் மகனுக்கு உதவி வரும் ஓர் இத்தாலியத் தாய், போரினால் பாதிக்கப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டு ஒரு முஸ்லீம் தாய், ஈராக்கில் நசுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் போன்றோரது கேள்விகளுக்கும் திருத்தந்தை பதில் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.