2011-04-22 14:09:43

திருத்தந்தை : கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்காகச் செபிக்குமாறு அழைப்பு


ஏப்ரல்22, 2011. இப்புனித வியாழன் மாலையில் உரோம் இலாத்தரன் பசிலிக்காவில் நம் ஆண்டவரின் இறுதி இரவுணவை நினைவுகூரும் திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
விசுவாசிகளின் செபம் தனது பாப்பிறைப் பணிக்கு இன்றியமையாதது என்பதையும் இத்திருப்பலி மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இயேசுவின் வழியைப் பின்பற்றி இத்திருப்பலியில் 12 அருட்பணியாளர்களின் பாதங்களையும் கழுவிய திருத்தந்தை, திருநற்கருணை ஐக்கியத்திற்கு விசுவாசம் தேவை, விசுவாசத்திற்கு அன்பு தேவை என்றார்.
இயேசு தம் சீடர்களோடு உண்ட இறுதி இரவுணவு மெசியா காலத் திருமண விருந்தாக இருந்தது, அது திருச்சபை நிறுவப்பட்டதையும் உலகின் மாற்றத்திற்கானத் தொடக்கத்தையும் குறிப்பதாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
ஆயினும் தனது நற்செய்திக்கு அனைவரும் பதில் அளிக்கமாட்டார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார், அது இன்றும் தொடர்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இயேசு நமக்காகக் காத்திருக்கிறார், நாம் உண்மையிலேயே அவர் மீது ஆவல் கொள்கிறோமா, அவரைச் சந்திப்பதற்கு உண்மையிலேயே ஆர்வமாக இருக்கின்றோமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
இத்திருப்பலியில் எடுக்கப்பட்ட உண்டியல் கடந்த மார்ச் 11ம் தேதி ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென அனுப்பப்படுகிறது. இப்பேரிடரில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.