2011-04-20 16:05:31

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


ஏப்ரல் 20, 2011. குளிர் காலத்தையே அதிகம் கொண்டிருக்கும் ஐரோப்பாவில் இத்தாலியின் காலநிலை, குறிப்பாக உரோம் நகரின் காலநிலை, அதிகக் குளிரும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக உள்ளது. இயேசுவின் உயிர்ப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்தப் புனித வாரத்தில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழிநடத்தும் திருவழிபாட்டுச் சடங்குகளில் பங்குபெற திருப்பயணிகள் உரோம் நோக்கி வந்து நகரை நிறைத்துக் கொண்டிருக்க, திருத்தந்தையும் தன் இவ்வார புதன் பொதுமறைபோதகத்தில், இவ்வியாழன் முதல் திருச்சபை சிறப்பான விதத்தில் நினைவு கூர்ந்து கொண்டாடவிருக்கும் இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு குறித்துச் சிந்தனைகளை வழங்கினார்.
இயேசு கிறிஸ்துவின் அன்புடன் கூடிய கீழ்ப்படிதலை ஆழமாக உணர்ந்து தியானிக்கும்படி இந்நாட்களின் திருவழிபாட்டுச்சடங்குகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மைப்போல் வாழ்ந்த இயேசு கிறிஸ்து, சோதனைகளை மறுத்து, இறை விருப்பத்திற்கு தன்னை முற்றிலுமாகக் கையளித்தார். இவ்வியாழனின் எண்ணெய் மந்திரிப்புத் திருப்பலியில் குருக்கள், தங்கள் குருத்துவத் திருநிலைப்பாட்டு வாக்குறுதிகளை புதுப்பிக்கின்றனர். இந்நாளில் திருஎண்ணெய் ஆசீர்வதிக்கப்படுகிறது. திருச்சபையின் திருவருட்சாதன வாழ்வு மூலம் நமக்குக் கிட்டியுள்ள, சிலுவையில் அறையுண்ட மற்றும் உயிர்த்த இயேசுவின் அருட்கொடையை நாமும் கொண்டாடுகிறோம். புனித வியாழன் மாலையில் இடம்பெறும் இயேசுவின் இறுதி இரவு உணவுத் திருப்பலி, திருநற்கருணை மற்றும் குருத்துவம் எனும் திருவருட்சாதனங்கள் நிறுவப்பட்டதை நம் நினைவுக்குக் கொணர்கிறது. ஒறுத்தல் மற்றும் உண்ணாநோன்பு மூலம் நாமும் இயேசுவின் துன்பங்களில் பங்குபெறவும், ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இதயத்திலிருந்து பெருகி ஓடும் இறைவனின் அன்பெனும் கொடையைப் பெறவும் புனித வெள்ளி திருவழிபாட்டுச் சடங்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. கிறிஸ்து உயிர்ப்பு விழாவுக்கு முந்தையத் தயாரிப்பு திருவிழிப்புச் சடங்கு, இறந்தோரிடமிருந்தான கிறிஸ்துவின் உயிர்ப்பையும், திருமுழுக்கில் பெறப்பட்ட புது வாழ்வையும் மகிழ்வுடன் பறைசாற்றுகிறது. இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு அன்புடன் கீழ்ப்படிந்த இயேசுவின் முன்மாதிரிகையை, நமது செபங்களின் வழியாகவும், நாம் இந்தத் திருவழிபாடுகளில் பங்கேற்பதன் மூலமும் பின்பற்ற உறுதி கொள்வோம். கிறிஸ்துவின் இந்தக் கீழ்ப்படிதலே, உண்மையான விடுதலையின் ஆதாரம் மற்றும் முடிவற்ற வாழ்வின் பாதை.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.