2011-04-19 14:36:42

ஏப்ரல் 20 – வாழ்ந்தவர் வழியில்...


கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் அமெரிக்கக் கண்டத்தின் முதல் புனிதராக உயர்த்தப்பட்டவர், பெரு நாட்டைச் சேர்ந்த லீமாவின் ரோஸ். 1586ம் ஆண்டு ஏப்ரல் 20ம் நாள் பிறந்த இவரது இயற்பெயர் இசபெல். மிகவும் அழகிய குழந்தையாய் இருந்த இவரை அனைவரும் ஒரு ரோஜா மலர் என்று அழைத்ததால், அந்தப் பெயரே இவருக்கு அமைந்து விட்டது.
பலரது கவனத்தையும் தனது அழகு ஈர்ப்பதை உணர்ந்த இவர், தன் அழகைக் குறைக்க பல வழிகளில் முயன்றார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கடினமாய் உழைத்தார். இளவயது முதல் சியென்னாவின் புனித கத்தரீனைப் போல் வாழ ஆவல் கொண்டு, மிகக் கடினமான தவமுயற்சிகளில் ஈடுபட்டார். திருமணம் முடிக்க எண்ணிய தன் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக துறவு வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். தன் இருபதாவது வயதில் தொமினிக்கன் துறவு மடத்தில் சேர்ந்த இவர், அங்கு பிறருக்குத் தெரியாத வண்ணம் மிகக் கடுமையான தவமுயற்சிகளை மேற்கொண்டார். கண்ணாடித் துண்டுகளைத் தன் படுக்கையில் பரப்பி, அவற்றின் மேல் ஒவ்வொரு இரவும் படுத்தார் என்று சொல்லப்படுகிறது. இவருக்கு இயேசு அடிக்கடி தோன்றி, இவரைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
1617ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் நாள் அவரது 31வது வயதில் இறையடி சேர்ந்தார். தனது இறக்கும் நாளைக் குறித்து முன்னரே அவர் பிறரிடம் கூறியிருந்தார். அவரது இறுதி ஊர்வலத்திலும், திருப்பலியிலும் லீமா நகர அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இவர் இறந்ததும், பல புதுமைகள் நிகழ்ந்தன. எனவே 50 ஆண்டுகளில் முத்திபேறு பெற்றவராகவும், 1671ம் ஆண்டு புனிதராகவும் உயர்த்தப்பட்டார். அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாவலியாக கருதப்படுபவர் லீமாவின் ரோஸ்.







All the contents on this site are copyrighted ©.