2011-04-18 14:20:12

தொழிற்நுட்பம் கடவுளுக்கு மாற்றுப் பொருளாக இருக்க முடியாது - திருத்தந்தை


ஏப்ரல் 18, 2011. தொழிற்நுட்பம் கடவுளின் சக்திகளைத் தனக்கு வழங்கும் என்று மனிதன் நம்பினால் அவன் தனது தற்பெருமைக்கு விலை கொடுக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எச்சரித்தார்.
புனித வாரத்தின் தொடக்கமாகிய குருத்தோலை ஞாயிறுத் திருப்பலி மறையுரையில் இவ்வாறு எச்சரித்த திருத்தந்தை, கடவுளோடு மனிதனுக்கு உள்ள உறவு குறித்தும் இந்த உறவானது சிலநேரங்களில் தொழிற்நுட்பத்தால் எவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றது என்பது குறித்தும் விளக்கினார்.
இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் சுமார் ஐம்பதாயிரம் விசுவாசிகள் பங்கு கொண்ட திருப்பலியில், உலகின் தொடக்கமுதல், ஆண்களும் பெண்களும் கடவுளைப் போல் ஆக வேண்டும் என்ற ஆவலால் நிறைந்து தங்களின் சொந்த வல்லமையால் கடவுளின் வல்லமையை எட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள், இது இன்றும்கூட உண்மையாக இருக்கின்றது என்றார் அவர்.
தொழிற்நுட்பத்தின் மாபெரும் முன்னேற்றங்கள் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளன, அதேசமயம் தீமைகளுக்கான வாய்ப்புக்களையும் அதிகரித்துள்ளன என்றும் கூறிய திருத்தந்தை, அண்மை இயற்கைப் பேரிடர்கள் இவற்றை நமக்கு நினைவுபடுத்துகின்றன என்றும் கூறினார்.
மனித சமுதாயம் சர்வ சக்தியும் படைத்தது அல்ல என்பதையும் இந்தப் பேரிடர்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன என்ற திருத்தந்தை, மனிதன் கடவுளோடு நல்லுறவு கொள்ள விரும்பினால் தான் கடவுளைப் போல் மாற வேண்டும் என்ற தற்பெருமையை முதலில் அவன் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
கிறிஸ்து வெற்றியோடு எருசலேமில் நுழைந்ததை நினைவுகூரும் விதமாக குருத்தோலைப் பவனி மேற்கொண்ட அவர், இந்தத் திருவழிபாடு வெறும் சடங்காக மட்டும் இருக்கின்றதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இந்தப் பவனி ஓர் ஆழமான ஆன்மீக அடையாளத்தைக் கொண்டுள்ளது, வாழும் கடவுளை நோக்கி இட்டுச் செல்லும் உன்னதப் பாதை வழியாக நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து பயணம் தொடர இது அழைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
இத்திருப்பலியில் கலந்து கொண்ட பெருமளவான இளையோர் உட்பட அனைத்து விசுவாசிகளும் இச்சனிக்கிழமை தனது 84வது பிறந்த நாளைச் சிறப்பித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.