2011-04-18 14:22:40

ஏப்ரல் 18. வாழ்ந்தவர் வழியில்.....


அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிப்பதற்கு “ஐன்ஸ்டைன்” என்ற சொல் பயன்படுத்தப்படுவதை இன்று காண்கிறோம். 1999 இல், புதிய ஆயிரமாம் ஆண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் இதழ், "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டைனுக்கு வழங்கியது.
ஜெர்மனியில், வுர்ட்டெம்பர்க்கிலுள்ள உல்ம் என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு மார்ச் 14இல் பிறந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். இத்தாலி, சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவைகளிலும் வாழ்ந்துள்ளார். ஜெர்மனியின் யூத இனத்தைச் சேர்ந்த இவருக்கு சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவை குடியுரிமை வழங்கி கௌரவித்தன. இஸ்ரேல் நாடு ஒரு படி மேலே போய் இவரை அந்நாட்டின் அரசுத்தலைவர் பதவியை ஏற்குமாறு 1952ல் கேட்டது. ஐன்ஸ்டைனோ அதனை மறுத்துவிட்டார். ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஏறத்தாழ அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன. ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவான்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
1955ம் ஆண்டு ஏப்ரல் 18ந்தேதி, தன் 76ம் வயதில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ ஜெர்சி மாநிலத்தின் பிரின்ஸ்டனில் காலமானார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.








All the contents on this site are copyrighted ©.