2011-04-18 14:22:23

இந்தியாவில் இறந்து பிறக்கும் குழந்தைகள் அதிகம்


ஏப்ரல் 18, 2011. ஒவ்வொரு நாளும் உலகில் 7000 குழந்தைகள் பிரசவத்திலேயே இறந்து பிறக்கின்றனர் என்றும் இந்த மரணங்களில் 98 விழுக்காடு வறிய, மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட சமுதாயத்தினர் மத்தியிலேயே நிகழ்கிறதென்றும் அண்மையில் வெளியான ஓர் மருத்துவ ஆய்வறிக்கை கூறுகிறது.
பிரசவத்தின்போது, இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகம் என்று பிரிட்டிஷ் மருத்துவ இதழான லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், இறந்து பிறக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையான 18 இலட்சத்தில் 66 விழுக்காடு மரணங்கள் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா, வங்கதேசம், காங்கோ, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், தான்சானியா ஆகிய 10 நாடுகளில் ஏற்படுவதாக அவ்வாய்வு கூறுகிறது.
அதிலும் குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் மற்றும் நைஜீரியா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் 50 விழுக்காடு மரணங்களுக்குக் காரணமாகின்றன.
இந்தியாவில், மாநிலத்துக்கு மாநிலம் இந்த இறப்பு வீதம் மாறு படுகிறது. அதாவது, ஆயிரம் குழந்தைகளுக்கு 22 முதல் 66 குழந்தைகள் வரையான குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன.
இறந்து பிறக்கும் குழந்தைகளின் மரணங்களில் சுமார் 50 விழுக்காடு, பிரசவ நேரத்தில் தான் ஏற்படுகிறதென்றும், சிக்கலான நேரத்தில் தரமான மருத்துவ வசதி கிடைக்காததே இதற்கு முக்கியக் காரணமென்றும் கூறப்படுகிறது.
பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத கிராமப் புறங்களில் தான், இந்த இறப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் தகுந்த மருத்துவ உதவிகளைப் பெருக்கினால், இந்த மரணங்கள் 2020ம் ஆண்டிற்குள் பாதி அளவு குறைக்க முடியும் என்றும் லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.