2011-04-16 15:44:45

வினாயக் சென்னுக்கு முன்பிணையல், திருச்சபைத் தலைவர்கள் வரவேற்பு


ஏப்ரல்16,2011. தேசதுரோகம் மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் வினாயக் சென்னுக்கு இந்திய உச்சநீதிமன்றம் முன்பிணையல் வழங்கியுள்ளதைத் திருச்சபைத் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.
இதே மாதிரியான மனித உரிமை விவகாரங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கின்றது என்று இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையச் செயலர் அருள்திரு சார்லஸ் இருதயம் கருத்து தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, விநாயக் சென் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அடிப்படையில் நீதிமன்றம் இவ்வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்பிணையல் வழங்குவதற்கு குறிப்பான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவரை முன்பிணையலில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள்.
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசதுரோக நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் இன்றையச் சுதந்திர இந்தியாவில் பொருத்தமானதுதானா என்ற விவாதம் நடைபெறும் நிலையில், இது குறித்து மறு ஆய்வு செய்யத் திட்டமிட்டிருப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.