2011-04-16 15:41:47

நாடோடி இனமக்களின் மாண்பும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதற்குத் திருப்பீட அதிகாரி வலியுறுத்தல்


ஏப்ரல் 16,2011 : ஜிப்சிஸ் என்றழைக்கப்படும் நாடோடி இனமக்கள் மனித சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள் என்பதால் அவர்களின் ஒட்டுமொத்தத் தனித்துவமும் மாண்பும் மதிக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு கேட்டுக் கொண்டார் பேராயர் அந்தோணியோ மரிய வேலியோ.
உரோம் புறநகர்ப் பகுதியிலுள்ள குரோத்தாஃபெராத்தா எனுமிடத்தில் “ஜிப்சிகள் : மனித சமுதாயத்தில் நம் சகோதர சகோதரிகள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இச்சனிக்கிழமை உரையாற்றிய திருப்பீடக் குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயரும் மக்களுக்கான மேய்ப்புப்பணி அவையின் தலைவர் பேராயர் வேலியோ இவ்வாறு வலியுறுத்தினார்.
சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் இத்தகைய மக்களுக்கென நல்லதோர் அரசியல் அமைப்பு அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் வேலியோ, இந்த இன மக்களுக்கு எதிரான நாத்சி அடக்குமுறையில் கடந்த நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான ஜிப்சிகள் வதைப்போர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட கொடுமையையும் நினைவு கூர்ந்தார்.
தற்சமயம் ஐரோப்பாவில் பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் ஏறக்குறைய அறுபது இலட்சம் ஜிப்சி சிறார் இருப்பதையும் குறிப்பிட்ட பேராயர், வருங்கால ஐரோப்பியத் திட்டத்தில் இச்சிறாருக்குக் கல்வி வழங்குவது இணைக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.