2011-04-14 15:51:02

லிபியாவில் நடைபெறும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பு அவை ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ள அறிக்கை


ஏப்ரல் 14,2011. தற்போது லிபியாவில் நடைபெற்று வரும் போர், வன்முறை, இரத்தம் சிந்துதல் இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; ஏனெனில், மனித வரலாற்றில் போர் எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைக் கொண்டு வந்ததில்லை என்று Tripoliயில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பு அவை இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை ஐ.நா.அவைக்கு அனுப்பியுள்ளது.
Tripoliயில் உள்ள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli அனுப்பியுள்ள இந்த அறிக்கையில், நாட்டை உருக்குலைத்து வரும் வன்முறைகளால் விசுவாசிகள் என்ற குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஆழ்ந்த வேதனையோடு இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் உடனடியாக கடைபிடிக்கப்பட்டு, பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவிகள் உடனே அவர்களை அடைய வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.லிபிய மக்களின் நம்பிக்கையையும், நாட்டின் சமாதானத்தையும் நிலை நிறுத்தும் அனைத்து உலக அமைப்புக்களையும் நாங்கள் வரவேற்கிறோம்; துன்புறும் அனைத்து லிபிய இஸ்லாமியச் சகோதரர்களுடன் செபத்தால் ஒன்றித்திருக்கிறோம் என்று இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.