2011-04-14 15:50:39

ஏழைகளுக்கு உரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - திருப்பீட அதிகாரி


ஏப்ரல் 14,2011. உலகின் எழ்மையைப் போக்க, ஏழைகளை உலகினின்று நீக்குவதற்குப் பதில், அவர்களுக்கு உரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
‘மக்கள் தொகையும் முன்னேற்றமும்’ என்ற தலைப்பில் நியூயார்க் நகரில் ஐ.நா.வின் தலைமையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இச்செவ்வாயன்று பேசிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் இவ்வாறு கூறினார்.
குழந்தைகள் பிறப்பு, மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவற்றை வர்த்தகக் கண்ணோட்டத்தில் காண்பதாலேயே அவைகளைக் குறித்த பல தேவையற்ற பயங்களை மனித சமுதாயத்தில் நாம் எழுப்பி வருகிறோம் எனவும், இதற்கு மாற்றாக, தன்னலத்தைக் குறைத்து, உலக செல்வங்களைப் பகிரும் மனிதாபிமானத்தை வளர்த்தால் உலகில் ஏழ்மையை நீக்கலாம் என்றும் பேராயர் சுல்லிக்காட் எடுத்துரைத்தார்.மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடிமான முயற்சிகளை மேற்கொண்ட உலகின் பல நாடுகள், முன்னேற்றத்தில் தட்டுப்பாடு, உற்பத்தியில் குறைவு ஆகிய எதிர்மறை விளைவுகளைச் சந்தித்து வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் சுல்லிக்காட், கல்வி மற்றும் பிற ஆக்கப்பூர்வமானச் செயல்பாடுகள் மூலம் உலகின் ஏழ்மையை நீக்க அரசுகள் திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.