2011-04-13 16:09:05

ஏப்ரல் 14. – வாழ்ந்தவர் வழியில்........,


“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.”
1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது ஒரு மக்கள் தலைவர் இவ்வாறு கூறினார். அவர் தான் டாக்டர் அம்பேத்கர்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். “இந்திய இலாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921இல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923இல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956இல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6இல் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.