2011-04-13 16:07:59

எகிப்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரிப்பதால், கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகள்


ஏப்ரல் 13, 2011. எகிப்தில் அண்மைய நாட்களில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறதென்றும், இதனால், கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் எகிப்தில் உள்ள தலத் திருச்சபையின் பத்திரிகைத் தொடர்புத் தலைவர் அருள்தந்தை Rafic Greich கூறினார்.
எகிப்தில் கடந்த சில வாரங்களாய் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் கெய்ரோவைச் சுற்றியுள்ள கிராமங்களில் Sharia எனப்படும் இஸ்லாமிய அடிப்படை நியதிகளை வலுக்கட்டாயமாகப் புகுத்தி வருவதால், ஒவ்வொரு நாளும் கெய்ரோவில் 70க்கும் மேற்பட்டோர் அந்நாட்டை விட்டு வெளியேறும் வழிகளைத் தேடி தங்கள் அலுவலகம் வருகின்றனர் என்று மனித உரிமைகளுக்கான எகிப்திய அமைப்பு கூறியுள்ளது.
நாட்டில் தற்போது இராணுவ ஆட்சி நடந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை இராணுவத்தினர் அடக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதென்று கூறிய அருள்தந்தை Rafic Greich, இவ்வாண்டு சனவரியில் எகிப்தில் ஏற்பட்ட புரட்சியால் நாட்டில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்று இளையோர் நம்பி வருகின்றனர் என்றும் சுட்டிக் காட்டினார்.மதப் பாகுபாடுகள் ஏதுமின்றி நடத்தப்பட்ட இந்தப் புரட்சியால் இளையோரிடையே மத அடிப்படைவாதங்கள் அதிகம் இல்லை என்றும், அடிப்படைவாதத்தை வளர்க்க விரும்பும் மதப் பெரியோருக்கு இவர்கள் அதிகம் செவிமடுப்பதில்லை என்றும் அருள்தந்தை Rafic Greich மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.