2011-04-12 14:38:31

திருப்பாடல் 23ன் சிறப்பு விவிலியத் தேடல்


RealAudioMP3
இது 42வது வாரம்... 42வது விவிலியத் தேடல். ஆம், அன்பர்களே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி திருப்பாடல் 23ல் நாம் ஆரம்பித்தப் பயணம் இன்று 42 வாரங்கள் கழித்து முடிவுக்கு வருகிறது. இதை ஒரு சாதனை என்று எண்ணுவதை விட அருள் நிறைந்த பயணமாக எண்ணவே தோன்றுகிறது. இந்தத் திருப்பாடல் தேடல்களை ஆரம்பித்தபோது, என் மனதில் பத்து அல்லது பதினைந்து தேடல்கள் நமது பயணம் தொடரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஆச்சரியங்களின் பிறப்பிடமான இறைவன் The God of Surprises வேறு திட்டங்களை வைத்திருந்தார். இந்த இறுதித் தேடலில் நாம் கடந்து வந்த பாதையின் ஒரு சில பகுதிகளைத் திரும்பிப் பார்க்க உங்களை அழைக்கிறேன்.

06-07-10,
நம்பிக்கை எனும் அமுதை கடந்த 3000 ஆண்டுகளுக்கும் மேலாக அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் ஓர் அமுத சுரபி "ஆண்டவர் என் ஆயர்" என்ற திருப்பாடல் 23 என்று சொன்னால், முற்றிலும் அது உண்மை.
கவலைகள், மனவலிகள் என்று நம்மை இருள் சூழும் நேரங்களிலும், நிறைவு, நன்றி என்று நம் மனதில் ஒளி எழும் நேரங்களிலும் இந்தத் திருப்பாடலை நாம் பயன்படுத்துகிறோம். மற்ற 149 திருப்பாடல்களை விட, விவிலியத்தின் பிற பகுதிகளை விட திருப்பாடல் 23ஐ பலரும் பயன்படுத்துவதற்கு காரணம் என்ன?
இந்தத் திருப்பாடல் நாம் எல்லாரும் எளிதில் ஏற்கக்கூடிய ஒர் உண்மையைத் தன் ஆறு திருவசனங்களில் சொல்கிறது. அதனால்தான் இது இவ்வளவு பயன்படுகிறது. என்ன உண்மை இது?
உலகில் நடக்கும் அநீதிகள், அவலங்கள் எல்லாவற்றையும் நாம் காணும் போது, அல்லது அந்தக் கொடுமைகள் நம் வாழ்வைத் தாக்கும்போது, "இறைவா நீ எங்கிருக்கிறாய்? ஏன் என்னை இந்த இருளில் தள்ளிவிட்டாய்?" என்று நம் மனதில் கேள்விகள் எழும் போது, கடவுளின் பதில் இப்படி கேட்கலாம்:
இந்த உலகம் நீதியாக, அமைதியாக, பிரச்சனைகள் இன்றி இருக்கும் என்று நான் வாக்குறுதி தரவில்லை. மாறாக, பிரச்சனைகளை நீ சந்திக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் என்றுதான் நான் உறுதி கூறியுள்ளேன்.இந்த எண்ணத்தை ஆழமாகச் சொல்கிறது இந்தத் திருப்பாடல்.
தீமைகள், துன்பங்கள் இல்லாத உலகம் என்ற உறுதியைவிட அந்தத் துன்பங்களில் கடவுளின் துணை உண்டு என்ற உறுதியைத் திருப்பாடல் 23 வழங்குவதாலேயே இது இவ்வளவு தூரம் பயன் படுத்தப் படுகிறது. புகழும் பெற்றுள்ளது. நாடு விட்டு நாடு அடிமைகளாக விரட்டப்பட்டு வாழ்ந்து வந்த இஸ்ராயல் மக்கள் மத்தியில் தலைமுறை, தலைமுறையாய்ச் சொல்லித் தரப்பட்ட பல வாழ்க்கைப் பாடங்களின் சாராம்சம் இந்தத் திருப்பாடல். திருப்பாடல் 23 சொல்லித்தரும் இந்த வாழ்க்கைப் பாடங்களின் உதவியோடு இந்த உலகைப் பார்க்கும் போது, உலகைப் பற்றிய பல பயங்கள் குறையும். ஏனெனில் இறைவன் நம்மோடு நடந்து வருகிறார்.
"நீங்கள் இனி பயப்படவேத் தேவையில்லை... புற்று நோயில் இருப்பவர்களுக்கு திருப்பாடல் 23ன் சிந்தனைகள்" (“You Don’t Have to be Afraid Anymore: Reflections on Psalm 23 For People with Cancer” Prepared by Dr. Ken Curtis) என்று தலைப்பிடப்பட்ட DVD 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. புற்று நோயில் உள்ளவர்கள் இந்தத் திருப்பாடல் மூலம் அடைந்த பயன்களை சாட்சியமாகக் கூறும் ஒரு ஆவணப் படம் இது. 104 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த ஆவணப் படம் ஒரு சில விருதுகளைப் பெற்றுள்ளது. விருதுகளுக்கு மேலாக, பல புற்று நோய் உள்ளவர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

20-07-10....
23ம் திருப்பாடலைத் தாவீது எழுதினார் என்பது பரவலான ஒரு கருத்து. இந்தப் பாடலை அவர் தன் வாழ்வின் இறுதியில் எழுதியிருக்கலாம் என்பதும் மற்றொரு பரவலானக் கருத்து.
வாழ்வின் இறுதியில், முதிர்ந்த வயதில், வாழ்வைப் பற்றியப் பல தெளிவுகள் ஏற்படும். நடந்து வந்த பாதையை மீண்டும் பார்க்கும் போது, அதில் கற்றுக் கொண்ட பாடங்களை மீண்டும் அசைபோடும் நாம், அந்தப் பாடங்களை அடுத்த சந்ததியினருக்கு வழங்க முயற்சி செய்வோம். தாவீது தன் வாழ்வுப் பாடங்களைத் திருப்பாடல்கள் வழியே தாராளமாக வழங்கிச் சென்றுள்ளார். அதுவும், திருப்பாடல் 23 என்ற அணுவைத் துளைத்து, ஏழு கடலைப் புகட்டிச்சென்றுள்ளார்.

23ம் திருப்பாடல் ஒரு செபமா? அப்படித் தெரியவில்லை. ஓ இறைவா... என் இறைவா... என்று பல திருப்பாடல்களில் பாடலாசிரியர் இறைவனை அழைத்துப் பேசியிருப்பது போல் இந்தத் திருப்பாடலில் இறைவனைக் கூப்பிடவில்லை. ஆண்டவர் என் ஆயர் என்ற ஒரு கூற்றுடன் ஆரம்பமாகிறது இந்தப் பாடல். ஆனாலும், நாம் இந்தத் திருப்பாடலை அழகானதொரு செபமாகத்தான் பயன்படுத்துகிறோம்.
இந்தத் திருப்பாடல் புகார்களின் பட்டியலும் அல்ல. வேறு பலத் திருப்பாடல்களில் புகார்களின் பட்டியல்கள் நீளமாக உள்ளன. ஆனால், இந்தத் திருப்பாடலில் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் வரிகளே அதிகம். எனவே, இதை ஒரு நன்றி நவிலல் எனக் கருதலாம்.
வழக்கமாக, விழாவொன்று நடந்தால், இறுதி நிகழ்வாக நன்றிகள் சொல்லப்படும். தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருந்த தாவீது, தன் வாழ்வை ஒரு விழாவாகப் பார்த்ததால், இந்த நன்றிப் பாடலைப் பாடினாரோ? அவர் வாழ்வு அப்படி ஒன்றும் விழாக்கோலமாய் இருந்ததைப் போல் தெரியவில்லையே. அவர் வாழ்விலும் எத்தனையோ இழப்புகள், துயரங்கள் இருந்தன. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆயனாய் பசும் புல்வெளிகளில், காடு மலைகளில் அவர் வாழ்வு முழுவதையும் அனுபவித்திருந்தால், முழு வாழ்வும் விழக்கோலமாய் இருந்திருக்கலாம்.
அந்த மகிழ்விலிருந்து கடவுள் அவரைப் பறித்து வந்து ஓர் அரண்மனையில் சிறைப்படுத்தி வைத்ததைப் போல் அல்லவா தாவீதின் வாழ்க்கை மாறிவிட்டது!... திரும்பிய இடமெல்லாம் துன்பம் அவரைத் துரத்தித் துரத்தி வந்ததே.
தாவீது தன் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகள், துயரங்களை மறக்கவில்லை. மறுக்கவும் இல்லை. அவைகளைப் பட்டும் படாமல் "சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்குகள், எதிரிகள்.." என்று இரு இடங்களில் மட்டும் குறிப்பிட்டு விட்டு, மீதிப் பாடல் முழுவதையும் பசும்புல் வெளி, அமைதியான நீர்நிலை, புத்துயிர், நீதி வழி, உமது கோல், நெடுங்கழி, விருந்து, நறுமணத்தைலம், நிரம்பி வழியும் பாத்திரம்... என்று நன்றி உணர்வால், மகிழ்வால் நிரப்பியுள்ளார். வாழ்வின் இறுதியில், தெளிவுகள் கிடைக்கும் என்று சொன்னோமே, அதுதான் இது. தாவீதுக்குக் கிடைத்தத் தெளிவு அவரை நன்றி உணர்வால் நிறைத்தது.

இந்தத் தேடல்களில் பல கதைகளை, உண்மைச் சம்பவங்களை நாம் பகிர்ந்து வந்தோம். அவைகளில் என் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாம் சிந்தித்த Ma Li, Zhai Xiaowei, மற்றும் Kamlesh Patel ஆகிய மூன்று இளையோரைப் பற்றி நாம் சிந்தித்த அந்தப் பகுதி. விபத்துக்களாலும், பிறவியில் ஏற்பட்ட ஒரு வியாதியாலும் உடலில் குறைகளைத் தாங்கிய இந்த இளையோர் நமக்குத் தந்த பாடங்கள் இன்னும் பலருக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவர்களைப் பற்றிய இரு வீடியோக்களை நான் குறிப்பிட்டேன்.

17-08-10
இந்த வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று மனம் ஏங்குகிறது. வாய்ப்பு உள்ளவர்கள், தவறாமல் நேரம் ஒதுக்கி, இந்த இரு வீடியோக்களையும் பாருங்கள். அந்த வீடியோ பதிவுகளின் ஒரு சில மணித்துளிகளையாவது ஒலி வடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆண்டவர் என் ஆயன். எனக்கேதும் குறையில்லை. என்று நாம் சொல்லும் 23ம் திருப்பாடலின் முதல் இரு வரிகளின் விளக்கத்தை வீடியோ வடிவில் அமைத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இரு வீடியோக்களும் எடுத்துக்காட்டுகள். Ma Li, Zhai Xiaowei, கம்லேஷ் படேல் என்ற இந்த மூன்று இளையோரின் நடனங்கள் உலகத்தில் குறைகளே இல்லை என்பதை இன்னும் ஆழமாய் நம்மை நம்ப வைக்கின்றன. இந்த மூன்று இளையோரின் நடனம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவர்களது பின்னணி நமக்குப் பாடமாகிறது.
இந்த மூவரின் நடனத் திறமையைக் கண்டு வியக்கும் நாம், இவர்கள் தொலைக்காட்சியில் அளித்துள்ள பேட்டிகளைக் கேட்டு இன்னும் வியக்கிறோம், பாடங்களைப் படிக்கிறோம். கம்லேஷ் சொல்லும் அழகான எண்ணங்கள் இவை:
"உடலில் குறையுள்ளவர்களுக்கு நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை நான் உடல் குறையுடன் இருந்து சொல்ல வேண்டும் என்பதைக் கடவுள் விரும்புகிறார் என்று நினைக்கிறேன். மன உறுதிக்கும், விடா முயற்சிக்கும் முன் உடல் குறைகள் இல்லாமல் போய்விடும் என்பதுதான் நான் உலகிற்கு, முக்கியமாக, இந்தியாவுக்குத் தரக் கூடிய நல்ல செய்தி... நடனம் ஆட, இரு கால்கள் வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கோ, நடனம் ஆட கால்கள் இல்லை. கடவுள் நம்பிக்கை இருக்கிறது."
இவர்களைப் போல் உலகில் உடல் குறைகள் இருந்தும் சாதனைகள் படைத்த பல மேதைகளைப் பற்றி நமக்குத் தெரியும். Helen Kellerன் (1880 1968) சாதனைகள் கடந்த நூற்றாண்டின் காவியம். Ludwig van Beethovan (1770 - 1827) என்ற இசைமேதை கேட்கும் திறனை முற்றிலும் இழந்த பின்னும் அறுபுதமான இசையை உருவாக்கினார். John Milton (1608 1674) என்ற கவிஞர், பார்வை இழந்த பின்னும் காவியங்களை உருவாக்கினார். இந்த சாதனை வரலாறு தொடரும். தனக்கு இருப்பது குறையில்லை என்று தீர்மானிக்கும் உள்ளங்கள் இருக்கும் வரை, இந்த சாதனை வரலாறு தொடரும்.

சாதனை வரலாறு தொடரும். உள்ளத்தில் நம்பிக்கை இருக்கும் வரை, அந்த நம்ப்க்கையை வளர்க்கும் திருப்பாடல் 23 இருக்கும் வரை சாதனைகள் தொடரும். மதம், விவிலியம் என்ற வேலிகளைத் தாண்டி, உலகமனைத்திலும் உள்ள மக்கள் வாழ்வில் திருப்பாடல் 23 தொடர்ந்து தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

பரந்து விரிந்த புல்வெளிகளில், அமைதியான நீர்நிலைகளுக்கருகில், இருள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் ஆயனாம் இறைவன் நம்மை வழிநடத்த, நமது வாழ்வுப் பயணம் தொடரட்டும். பயணத்தின் இறுதியில் இறைவனின் இல்லத்தில், அவரது அன்பான அணைப்பில் என்றென்றும் வாழும் வரத்தை நாம் அனைவரும் பெற ஒருவர் ஒருவருக்காக வேண்டுவோம்.
இறுதியாக ஓர் எண்ணம்... ஆண்டவர் என் ஆயன் என்ற இந்த நம்பிக்கை தரும் திருப்பாடலை நாம் சிந்தித்து முடிக்கும் வேளையில், தமிழ் நாட்டில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. தமிழக மக்களை நல்வழியில் நடத்தும் நல்ல தலைவர்களை, தமிழ் நாட்டை வளமான எதிர்காலத்தை நோக்கி நடத்திச் செல்லும் தலைவர்களைத் தமிழகம் பெறவேண்டும் என்று உருக்கமாக வேண்டிக் கொள்வோம்.







All the contents on this site are copyrighted ©.