2011-04-12 12:29:19

ஐரோப்பாவில் மக்கள்தொகைக் குறைவால் பொருளாதாரப் பாதிப்பு


ஏப்ரல் 11, 2011. ஐரோப்பாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதமும், முதியோரின் இறப்பு விகிதமும் குறைந்து வருவது மிகப்பெரும் பொருளாதாரச் சவாலை இக்கண்டத்திற்கு முன் வைக்கக்கூடும் என்கிறது ஐரோப்பிய சமுதாய அவையின் அறிக்கை.
ஐரோப்பாவின் மக்கள்தொகை ஒரே சீரான அளவில் இருக்கவேண்டுமெனில் அக்கண்டத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் 2.1 குழந்தைகள் என்ற விகிதம் இருக்கவேண்டிய சூழலில், தற்போது அது 1.6 என்றே உள்ளது என்ற இவ்வறிக்கை, ஏற்கனவே பல்கேரியா, லித்துவேனியா, லாத்வியா மற்றும் ருமேனியாவில் பிறப்புகளின் எண்ணிக்கையைவிட இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் மக்களின் குடிபெயர்வுகளாலும் மக்கள்தொகை குறைந்து வருகிறது எனத் தெரிவிக்கிறது.
27 ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளுள் 13ல், பெண்கள் தங்களின் 30 வயதிலேயோ அல்லது அதற்கு மேலேயோதான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறுகிறது இவ்வறிக்கை.
ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் மக்கள்தொகை மிகப்பெரும் அளவில் குறையாமல் காப்பாற்றப்படுவதற்கு, அதற்கு வெளியேயிருந்து அந்நாடுகளில் குடியேறும் மக்களும் ஒரு காரணம் என மேலும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.