2011-04-12 14:38:17

ஏப்ரல் 13வாழந்தவர் வழியில்...


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் 1930ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கல்யாணசுந்தரம். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், பின்னர் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
பத்தொன்பதாவது வயதிலேயே கவிதை புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். தன் பாடல்கள் வழியே இந்தியாவில் இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டினார். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், திரைப்பட பாடல்களாக வடித்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ல் 25வது வயதில் திரைப்படப் பாடல்கள் எழுத ஆரம்பித்தார். 4 ஆண்டுகளில் 58 திரைப்படங்களில், 180க்கும் மேற்பட்டப் பாடல்களை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே பாப்பா திருடாதே போன்ற புகழ்பெற்ற பாடல்கள் மூலம் வளரும் தலைமுறையினருக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி. இதே 1959ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள் தனது 30வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.







All the contents on this site are copyrighted ©.