2011-04-11 16:16:48

விவிலியம் கிழிக்கப்பட்டதற்கு எதிராக வன்முறைகள் வேண்டாம் என்கிறது பாகிஸ்தான் திருச்சபை.


ஏப்ரல் 11, 2011. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் ஒரு சிறு குழுவால் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அண்மையில் லாகூர் பேராலயம் முன் விவிலியப்பிரதி ஒன்று கிழிக்கப்ப்பட்டது குறித்து கிறிஸ்தவர்கள் எவரும் வன்முறைகளிலோ எதிர்ப்புப் போராட்டங்களிலோ ஈடுபடக்கூடாது என பாகிஸ்தான் தலத்திருச்சபை அழைப்பு விடுத்துள்ளது.
முகமது அக்தர் என்பவர் அண்மையில் லாகூர் பேராலயம் முன் விவிலியப்பிரதி ஒன்றை கிழித்தெறிந்ததைப் பற்றிக் குறிப்பிட்ட அந்த உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு ஆன்ட்ரூ நிசாரி, பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கு வந்துள்ள இந்த சோதனையிலும் இயேசுவின் பாடுகளை பொறுமையுடன் பின்பற்றி வெற்றி காண்போம் என விண்ணப்பித்ததுடன், எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடமாட்டோம் என்ற தீர்மானத்தை கிறிஸ்தவர்கள் எடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.
அக்தரின் இந்த நடவடிக்கையை பெரும் பிரச்னையாக்க தாங்கள் விரும்பவில்லை என்ற லாகூர் முன்னாள் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா, கிறிஸ்தவர்களுக்கு எதிரான விரோதப்போக்குகள் பாகிஸ்தானில் பெருகி வருவது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவிலியத்தை லாகூர் பேராலயம் முன் எரித்த அக்தர் என்ற இஸ்லாமியர் தற்போது காவல்துறையால் தேவ நிந்தனைக் குற்றத்திற்காக கைதுச் செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவரின் இச்செயலை மன்னித்து விட்டதாக தலத்திருச்சபை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.