2011-04-11 16:15:30

தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு துன்புறும் பலருக்காக புனித வாரப் புதனன்று மேற்கொள்ளப்படும் சிறப்புச் செபங்கள்


ஏப்ரல் 11,2011. ஆசியா பீபி உட்பட தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு துன்புறும் பலருக்காக வருகிற ஏப்ரல் 20ம் தேதி புனித வாரப் புதனன்று பாகிஸ்தானிலும் இன்னும் உலகின் பிற நாடுகளிலும் சிறப்புச் செபங்கள் மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தானில் உள்ள Masihi அமைப்பு FIDES செய்தி நிறுவனத்திடம் அறிவித்துள்ளது. இந்த முயற்சி குறித்த அனைத்து விவரங்களும் இச்செவ்வாயன்று வெளியிடப்படும் என்றும் இந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் விசுவாசிகள் கையில் உள்ள ஒரு தலை சிறந்த ஆயுதம் செபம் என்றும், இதன் வழியே கடவுளின் செயல்பாடுகளைப் பாகிஸ்தானும், இந்த உலகமும் காணும் என்றும் இந்த முயற்சி குறித்து பேசிய Multan ஆயர் Andrew Francis கூறினார்.
Masihi அமைப்பினர் FIDES செய்தி நிறுவனத்தின் மூலம் இந்த செப நாளுக்கென உலகின் பல கத்தோலிக்க, மற்றும் கிறிஸ்தவ அமைப்பினருக்குத் தங்கள் வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
‘ஆசியா பீபியின் காவல் தூதர்கள்’ என்று அழைக்கப்படும் ஒரு செபக் குழுவையும் சேர்த்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள பல துறவறக் கன்னியர்கள் சபையினர் இந்த முயற்சிக்குத் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 20ம் தேதி சமயங்களுக்கிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Jean Louis Tauran தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் இந்த செப நாள் இத்தாலியில் ஆரம்பமாகும் என்று FIDES செய்தி கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.