2011-04-11 16:03:59

தாய்நாட்டிற்கானப் பணிகளும் திருச்சபைக்கான அர்ப்பணமும் ஒத்திணங்கிச் செல்லமுடியும் என்கிறார் பாப்பிறை


ஏப்ரல் 11, 2011. அறிவியல் துறைகளிலும் ஆன்மீக விடயங்களிலும் சிறந்து விளங்கிய குரோவேசிய இயேசு சபை குரு Ruđer Josip Boškovićக்கென இவ்வாண்டை அர்ப்பணிப்பதாக குரோவேசிய அரசு அறிவித்துள்ளது, அறிவியலும் விசுவாசமும், தாய்நாட்டிற்கான பணிகளும் திருச்சபைக்கான அர்ப்பணமும் ஒத்திணங்கிச் செல்லமுடியும் என்பதை வெளிக்காட்டி நிரூபிப்பதாய் உள்ளது என்றார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான குரோவேசிய நாட்டின் புதியதூதுவர் Filip Vučakஇடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய திருத்தந்தை, ஓர் இயற்பியலாளராக, வானவியலாளராக, கணிதஇயல் வல்லுனராக, கட்டிடக்கலை நிபுணராக, மெய்யியலாளராக, அரசியல் வல்லுனராக விளங்கிய இயேசுசபை குரு Bošković, இவ்வுலகில் சாதிக்க வேண்டியவைகளைச் சாதித்து அதேவேளை, ஒரு விசுவாசியாகவும் நாம் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதைக் காட்டி நிற்கிறார் என்றார்.
ஐரோப்பிய சமுதாய அவையில் விரைவில் முழுமையாக ஐக்கியமாக உள்ள குரோவேசிய நாடு, தனக்கேயுரிய வரலாறு, மத மற்றும் கலாச்சார தனித்தன்மைகளுடன் ஐரோப்பிய சமுதாய அவையில் நல்ல தாக்கங்களைக் கொணர முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் திருத்தந்தை. எக்காலத்திலும் ஐரோப்பிய சமுதாயம் தன் கிறிஸ்தவ மூலத்தை மறந்து விடக்கூடாது என்ற விண்ணப்பத்தையும் அவர் முன்வைத்தார்.
இன்னும் சில வாரங்களில் தான் குரோவேசிய நாட்டில் திருப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்தும் திருத்தந்தை, திருப்பீடத்திற்கான குரோவேசியாவின் புதிய தூதுவருடன் ஆன தன் சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார். வரும் ஜூன் மாதத்தின் 4 மற்றும் 5 தேதிகளில் அந்நாட்டில் திருப்பயணம் மேற்கொள்கிறார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.