2011-04-11 16:26:50

ஏப்ரல் 12 வாழ்ந்தவர் வழியில் .....


போலியோ அல்லது இளம்பிள்ளை வாதம் என்ற தொற்றுநோய் உடல் முழுவதையும் பாதிக்கக்கூடியது. ஆயினும் இந்நோய் எப்போதும் நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது. மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ நுண்கிருமிகள் காணப்படும். சுத்தமற்ற உணவுகளை உட்கொள்ளும் போது இந்நோய்ப் பரவுகிறது. மனித மலம், கழிவுகள் மூலம் மாசுபட்ட குடிதண்ணீரில் அல்லது கிணறு,குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் நீந்தும் போதோ, குளிக்கும் போதோ அல்லது குடிக்கும் போதோ வளர்ந்த பிள்ளைகள் மற்றும் இளையோர்களில் இது பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நேரங்களில், இவ்வகை நோய்க் கிருமிகள் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிலிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது. இவ்வகை நுண்கிருமிகள் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து, பின்னர் குடல் பகுதியைச் சென்றடைந்து பின்னர் குடல் செல்களில் எண்ணிக்கையில் பெருக்கம் அடைகின்றது. பின்னர் இந்நுண்கிருமிகள் மலத்தின் மூலம் சில வாரங்களில் வெளியேற்றப்படுகிறது. இப்படியாக வாழ்க்கைச் சுழற்சியைப் புதுப்பித்து, முழு சமுதாயத்திற்கும் ஆபத்தினை விளைவிக்கும் இடர்களை ஏற்படுத்துகிறது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர். இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. Jonas Salk என்பவர் கண்டுபிடித்து அறிவித்த போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசியை இவர் முதலில் 1952ல் பரிசோதித்துப் பார்த்தார். அதில் வெற்றி கிட்டியதையடுத்து இதனை அவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி உலகுக்கு வெளியிட்டார். ஆல்பர்ட் சபின் என்பவர் 1957ல் இந்நோய்க்கு வாய்வழித் தடுப்பு மருந்தையும் பரிசோதனை செய்தார். இவரது கண்டுபிடிப்புக்கு 1962ல் அங்கீகாரம் கிடைத்தது. இந்த இரண்டு வகை மருத்துவத்தால் உலகில் 1988ல் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரமாக இருந்த போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை 2007ல் 1652 ஆகக் குறைந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1952ல் 58 ஆயிரம் பேரும் 1953ல் 35 ஆயிரம் பேரும் இந்நோயால் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.