2011-04-09 16:27:00

ஏப்ரல் 10, வாழ்ந்தவர் வழியில்...


“என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள். நானும் உங்களைப் போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.”
இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் லெபனான் நாட்டுக் கவிஞர் கலீல் கிப்ரான்.
சரியாக 80 ஆண்டுகளுக்கு முன், 1931ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் இவ்வுலகை விட்டுப் பிரியாவிடை பெற்ற கவிஞர் கிப்ரானின் கல்லறையில் இந்த வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
1883ம் ஆண்டு சனவரி 6ம் நாள் பிறந்தவர் கலீல் கிப்ரான். லெபனானில் பிறந்த இவர், இளவயதிலேயே அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குக் குடிபெயர்ந்தார். ஓவியராக, எழுத்தாளராக, கவிஞராக விளங்கிய இவர், இவ்வுலகிற்கு பல அரிய கருவூலங்களை விட்டுச் சென்றுள்ளார். இவர் எழுதிய 'The Prophet' அதாவது, 'இறைவாக்கினர்' என்ற புகழ்பெற்ற நூல் 1923ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1960களில் மாற்றுக் கலாச்சாரம் என்ற எண்ணம் உலகில் அதிகம் பரவி வந்த வேளையில், கவிஞர் கிப்ரானின் எண்ணங்களும் உலகினர் அனைவரையும் அதிகம் கவர்ந்தன. தலை சிறந்த கவிஞர்கள் Shakespeare, Lao Tzu ஆகியோர் எழுதிய நூல்களுக்கு அடுத்தபடியாக, கவிஞர் கலீல் கிப்ரான் எழுதிய நூல்களே மிக அதிகமாய் விற்பனையாகியுள்ளன என்று சொல்லப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.