2011-04-09 14:49:33

அண்ணா ஹஸாரேவின் கோரிக்கையை அரசு ஏற்றது மக்களுக்குக் கிடைத்த வெற்றி - டெல்லி பேராயர்


ஏப்ரல்09,2011. இந்தியாவில் ஜன் லோக்பால் மசோதா குறித்து சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான அண்ணா ஹஸாரே முன்வைத்த கோரிக்கைகளை நடுவண் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சஸ்சாவோ தெரிவித்தார்.
72 வயதான அண்ணா ஹஸாரே, இந்தியாவைக் கடுமையாய்ப் பாதிக்கும் ஊழலை எதிர்த்து 4 நாள்களாக தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
ஜன் லோக்பால் மசோதாவை வரையறுக்கக் கூட்டுக் குழு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசு ஒப்புக் கொண்டதையடுத்து அண்ணா ஹஸாரே தனது போராட்டத்தை இச்சனிக்கிழமை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.
இது குறித்துப் பேசிய அண்ணா ஹஸாரே, "எங்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, எனது உண்ணாவிரதத்தை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது நமது நாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று கூறினார்.
இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து கிறிஸ்தவத் தலைவர்கள், அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன.








All the contents on this site are copyrighted ©.