2011-04-06 12:12:01

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


ஏப்ரல் 06, 2011. இத்தாலி நாட்டில் குளிர் காலம் முடிவடைந்து வசந்த காலம் துவங்கியுள்ள நிலையில், சூரியக்கதிர்களோ மிதமான வெப்பத்தை வீசிக்கொண்டிருக்க, இவ்வார திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் நிரம்பியிருக்க, Lisieuxன் புனித தெரேசா குறித்து தன் சிந்தனைகளை வழங்கினார் பாப்பிறை.
Lisieuxன் புனித தெரேசாவின் 'புனிதத்துவத்திற்கான சிறு வழி' என்ற போதனை நம் காலத்தில் மிகுந்த நல்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்றாகும். பக்தி நிறைந்த ஃபிரெஞ்ச் குடும்பத்தில் பிறந்த இப்புனிதை தன் 15ம் வயதிலேயே கார்மேல் சபைக் கன்னியர் மடத்தில் இணைவதற்கான அனுமதியைப் பெற்றார். இத்துறவு மடத்தில் இவர் 'திருமுகம் மற்றும் குழந்தை இயேசுவின் அருட்சகோதரி திரேசா' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். இயேசுவின் மனுவுரு மற்றும் மீட்பின் மறையுண்மைகளில் வெளிப்படுத்தப்பட்ட இறையன்பை தியானிப்பதை மையமாகக் கொண்டிருந்த இவரின் ஆன்மீகத்தின் இதயத்தை, இவர் தேர்ந்துகொண்ட பெயர் வெளிப்படுத்துவதாக இருந்தது. கிறிஸ்துவை முற்றிலுமாக பின்பற்றி, அனைத்திலும் தன்னைச் சிறியவளாக்கி, உலகின் மீட்புக்காகப் பணியாற்றினார். 23ம் வயதில் உடல் நலம் குறைவுற்ற இப்புனிதை, சிலுவையில் அறையுண்ட இயேசுவுடன் ஆன ஒன்றிப்பில் தன் அனைத்து உடல் வேதனைகளையும் தாங்கிக்கொண்டார். தன் விசுவாசத்திற்கான துன்பம் நிறை சோதனைகளையும் அனுபவித்த புனித தெரேசா, அவைகளை, இறைமறுப்புக் கொள்கையாளர்களின் மீட்புக்காக அர்ப்பணித்தார். வாழ்வின் மிகச்சிறிய விடயங்களில் கூட இறைவனின் அன்பிற்கு செயலுருவம் கொடுக்க முயன்றதன் வழி, அவர் தன் இறையழைத்தலை, திருச்சபையின் இதயத்தில் நிலவும் அன்பாகக் கண்டார். நம் ஆன்மீக குழந்தைப்பருவத்தில், ஆன்மாக்களின் நலனுக்காகவும் இறையன்பிற்காகவும் நம்மை முற்றிலுமாகக் கையளித்து 'அன்பு மற்றும் நம்பிக்கை எனும் சிறு வழியை' பின்பற்ற Lisieuxன் புனித தெரேசாவின் எடுத்துக்காட்டும் ஜெபங்களும் நமக்கு உதவட்டும் என தன் புதன் மறைபோதகத்தை நிறைவுச் செய்தார் திருத்தந்தை.
கோஸ்ட ரிக்கா மற்றும் லிபியாவில் அண்மைக்காலங்களில் இடம்பெறும் நிகழ்வுகளால், அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நினைவுகூர்வதாக தன் மறைபோதகத்தின் இறுதியில் குறிப்பிட்டார் பாப்பிறை. தன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்த கோஸ்ட ரிக்கா நாட்டிற்கு தன் பிரதிநிதியாக அனுப்பப்பட்டுள்ள கர்தினால் Turkson அந்நாட்டிற்குள் விரைவில் நுழைவார் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் அவர். இந்நாடுகளில் இடம்பெறும் வன்முறைகளுக்குப் பலியானவர்களுக்காகச் செபிப்பதாக உரைத்த பாப்பிறை, இரத்தம் சிந்தலைத் தவிர்க்கும் நோக்கில், அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகளின் பணிகளைக் கைக்கொள்ளவேண்டும் என போரிடும் துருப்புகளை விண்ணப்பிப்பதாகவும் கூறினார்.
இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.