2011-04-06 15:41:08

குரான் எரிக்கப்பட்டது, ஐ.நா.வின் பல்வேறு கொள்கைகளுக்கு முரணான ஒரு செயல் - ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்


ஏப்ரல் 06,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அண்மையில் இஸ்லாமியரின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டது, ஐ.நா.வின் பல்வேறு கொள்கைகளுக்கு முரணான ஒரு செயல் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
உலகளாவிய இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்களை இச்செவ்வாயன்று ஐ.நா.தலைமையகத்தில் சந்தித்துப் பேசிய பான் கி மூன், சகிப்புத் தன்மை, பன்முகக் காலாச்சாரங்களை ஏற்றுக் கொள்தல், மதங்களுக்கு உரிய மரியாதையை வழங்குதல் என்ற ஐ.நா.வின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக இருந்த இந்தச் செயல் எந்த ஒரு மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று என்று கூறினார்.
குரான் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வன்முறைகளில் ஐ.நா.ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டனர், மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன், இந்த வன்முறையையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.ஐ.நா. பொதுச் செயலரும், இஸ்லாமிய அமைப்பினரும் மேற்கொண்ட இந்தச் சந்திப்பில் மத்திய தரைப் பகுதி, மற்றும் ஆப்ரிக்காவின் பல இஸ்லாமிய நாடுகளில் உருவாகியுள்ள பதட்ட நிலைகளும் விவாதிக்கப்பட்டன என்று UN செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.