2011-04-05 15:19:34

குரான் எரிப்புக்குக் காரணமான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் போதகர் கைது செய்யப்பட வேண்டும்-பாகிஸ்தான் பேராயர் வலியுறுத்தல்


ஏப்ரல்05,2011. இசுலாமியப் புனித நூலான குரானை எரிப்பதற்குத் தீர்மானம் எடுத்த அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பிரிந்த கிறிஸ்தவ சபைப் போதகரைக் கைது செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா அமெரிக்க அரசைக் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஃப்ளோரிடா மாநிலத்தில் Gainesville, Dove World Outreach Center Church போதகர் Terry Jones ன் மேற்பார்வையில் அவரது உதவியாளர் போதகர் Wayne Sapp என்பவர் குரான் புனித நூலை எரித்தார். இந்நடவடிக்கை முஸ்லீம் உலகத்தைக் கடும் கோபமடையச் செய்துள்ளது. இதனால் ஏற்பட்ட வன்முறைகளில் இருபதுக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, போதகர் டெரி ஜோன்ஸைக் கைது செய்வதன் மூலம் முஸ்லீம் உலகெங்கும் ஏற்பட்டுள்ள கோபத்தைத் தணிக்க முடியும் என்று பேராயர் சல்தான்ஹா மேலும் கூறினார்.
இந்தக் குரான் எரிப்பு நடவடிக்கையால் மத்திய கிழக்குப் பகுதியெங்கும் முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நான்கு நாட்களாகத் தொடர்ந்து போராட்டங்கள் இடம் பெற்றன. அங்குள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டுத் துருப்புக்கள் வெளியேற வேண்டுமென்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.