2011-04-04 16:56:34

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை


ஏப்ரல் 04, 2011 நம் வாழ்வை ஒளிர்விக்க கிறிஸ்துவை அனுமதிப்பதன் மூலம், நம் முழு நிறைவுக்கான அச்சுறுத்தல்களை அகற்ற முடியும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு மூவேளை செபத்தைத் திருத்தந்தையுடன் இணைந்து ஜெபிக்க உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் வழங்கிய 'பிறவிக்குருடர் குணம் பெற்ற புதுமை' குறித்து எடுத்துரைத்த பாப்பிறை, சாதாரண ஒரு மனிதனின் வாழ்வில் இடம்பெறும் விசுவாசத் திருப்பயணத்தை இப்புதுமை காட்டுகிறது என்றார்.
கூட்டத்தில் ஒருவராக இயேசுவை எண்ணி சந்திக்கும் இப்பிறவிக் குருடர், பின்னர் அவரை இறைவாக்கினராக எண்ணுகிறார். இறுதியில் கண்கள் திறக்கப்பட்டபோது, இயேசுவை ஆண்டவராக அறிக்கையிடுகிறார் என்ற படிப்படியான வளர்ச்சியை எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஆதாமின் பாவத்தால் நாமும் பிறவியிலிருந்தே கொண்டிருக்கும் குருட்டு நிலையையும், அதன் பின் திருமுழுக்கின்போது பெறப்படும் உள்ளொளியையும் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, பாவம் மனித குலத்தைக் காயப்படுத்தி, மரணத்தை நோக்கி இட்டுச்சென்றது ஆனால் கிறிஸ்துவில் வாழ்வின் புது நிலை ஒளிர்கிறது என மேலும் உரைத்தார்.
நம் வாழ்வு கிறிஸ்துவால் ஒளிர்விக்கப்பட நாம் அனுமதிக்கும்போது, நம் வாழ்வின் முழு நிறைவை நோக்கிய பாதையில் வரும் அச்சுறுத்தல்களிலிருந்து விடுதலை பெறுவோம் என்ற பாப்பிறை, திருமுழுக்கின்போது பெறப்பட்ட கொடையான தீச்சுடர் அணையாமல் காக்கப்பட, செபம் மற்றும் அயலார் மீதான நம் அன்பின் மூலம் உதவுவோம் என்ற அழைப்பையும் முன் வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.