2011-04-04 15:06:17

ஏப்ரல் 05 வாழ்ந்தவர் வழியில்......


கைலாசபதி என்பவர் ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். இவர் மலேசியாவின் கோலாலம்பூரில் 1933ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலக்கட்டத்தில் (1946-47) இலங்கை சென்றார். அங்கு முதுகலை படிப்பை முடித்து வேலையும் செய்தார். பின்னர் முனைவர் பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, “தமிழில் வீரச்செறிவுமிக்கக் கவிதைகள்” ("Tamil Heroic Poetry") என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவர் ஆற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தன. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாடு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவர் ஆற்றிய புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்றிருந்த கைலாசபதி, தனது 49வது வயதில் 1982ம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி காலமானார்.
தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.







All the contents on this site are copyrighted ©.