2011-04-04 17:01:43

உலகம் முழுவதும் மோதல்களில் இரத்தம் சிந்தப்படுவது, இயேசு சிந்திய இரத்தத்தை நினைவுக்குக் கொணர்கிறது


ஏப்ரல் 04, 2011 உலகம் முழுவதும் மோதல்களில் இரத்தம் சிந்தப்படுவதைக் காணும்போது, நம் அனைவருக்காகவும் இயேசு இரத்தம் சிந்தியது நினைவுக்கு வருகின்றது என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
வாரம் ஒருமுறை தொலைக்காட்சியில் வழங்கும் ஒக்தாவா தியேஸ் என்ற நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்ட திருப்பீடப்பேச்சாளர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் 'நாசரேத்தின் இயேசு' என்ற புத்தகத்தில் 'இயேசுவின் இரத்தம் எவருக்கு எதிராகவும் சிந்தப்படவில்லை மாறாக அனைவருக்காகவும் வழங்கப்பட்டது' என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.
நம் ஒவ்வொருவருக்கும் அன்பின் புனிதப்படுத்தும் சக்தி தேவைப்படுகின்றது, அந்த சக்தியே இயேசுவின் இரத்தம், என்ற குரு லொம்பார்தி, இயேசுவின் இரத்தம் சிந்தல் ஒரு சாபமல்ல மாறாக மீட்பு என உரைத்தார்.
ஐவரி கோஸ்ட், லிபியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் சிந்தப்படும் இரத்தம், இன்றைய மற்றும் வருங்கால பகைமை நிலைகளுக்கே இட்டுச் செல்வதாக உள்ளது என்பதைக் குறித்த கவலையையும் வெளியிட்ட குரு லொம்பார்தி, மனிதகுல வன்முறைகளால் விளையும் துன்பம் கண்டு மனித குல விரோதிகளால் மட்டுமே மகிழ முடியும் என்றார்.
அமைதிக்காக உழைப்போரின் கடினமான பணியானது, சிலுவை மற்றும் உயிர்ப்பை நோக்கிய பயணத்தால் பலம்பெறுகிறது என மேலும் உரைத்தார் திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.