2011-04-02 14:44:33

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கிறிஸ்தவப் புண்ணியங்களில் சிறந்து விளங்கியவர் - கர்தினால் அமாத்தோ


ஏப்.02,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வரலாற்றிலோ அல்லது திருச்சபையிலோ ஏற்படுத்திய தாக்கத்திற்காக அல்ல, மாறாக பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு ஆகிய கிறிஸ்தவப் புண்ணியங்களை அவர் வாழ்ந்த விதத்திற்காகவே அவர் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கிறார் என்று கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ தெரிவித்தார்.
இத்திருத்தந்தை இறந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து இவரது புனித வாழ்வை இறைமக்கள் பறைசாற்றத் தொடங்கினர் என்றுரைத்த கர்தினால் அமாத்தோ, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மக்கள் அவரது கல்லறையைத் தரிசிக்கின்றனர் என்றார்.
வருகிற மே முதல் தேதி இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படவுள்ளதையொட்டி உரோம் திருச்சிலுவை பாப்பிறைப் பல்கலைகழகத்தில் இவ்வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய புனிதர் நிலைக்கு உயர்த்தும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானத் திருப்பீடப் பேராயத் தலைவரான கர்தினால் அமாத்தோ இவ்வாறு கூறினார்.
திருச்சபையில் ஒருவரை முத்திப்பேறு பெற்றவராகவும் புனிதராகவும் அறிவிப்பது அவரது உயரிய இறையியல் புரிதலை வைத்தோ அல்லது அவர் ஆற்றி்ய அரும்பெரும் பணிகளை வைத்தோ அல்ல, மாறாக அவர் கிறிஸ்தவப் புண்ணியங்களை அசாதாரண வழியில் வாழ்ந்து பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருப்பதை வைத்தே அவர் இந்நிலைகளுக்கு உயர்த்தப்படுகின்றார் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பல நாடுகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டது, அவரது உரைகள், சந்திப்புக்கள் என அவரைப் பற்றிய பல விபரங்கள் Youtube மற்றும் Facebook ல் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. வத்திக்கான் வானொலியும் CTV என்ற வத்திக்கான் தொலைக்காட்சி மையமும் இணைந்து இவற்றை வெளியிட்டுள்ளன.
என்றும் என்றும் வலைத்தளத்தில் சொடுக்கினால் இந்த வீடியோ ஒலி-ஒளிக் காட்சிகளைக் காணலாம். இக்காட்சிகளை ஒவ்வொரு நாளும் Facebook மற்றும் Youtube களில் எண்ணற்ற மக்கள் பார்த்தும் கேட்டும் பயனடைந்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.