2011-04-02 15:10:41

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
சேகர், செந்தில் என்ற இரு நண்பர்கள் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தனர். ஒரு நாள் மதியஉணவு இடைவேளை முடிந்து, சேகர் அலுவலகத்திற்கு தலைதெறிக்க ஓடி வந்தான். அங்கு அமர்ந்திருந்த செந்திலிடம், "நான் எதிர்ல இருக்கிற ஹோட்டல்ல பிரியாணி சாப்டுட்டு வெளியே வந்தப்ப, ஒரு கார் என்மேல மோதுறது மாதிரி வந்து ப்ரேக் போட்டது. அந்தக் காரைத் துரத்திகிட்டு ஒரு போலிஸ் ஜீப் வந்தது. கார்ல இருந்து மூணு பேர் முகமூடி போட்டுக்கிட்டு எறங்குனாங்க. அவங்க வச்சிருந்த துப்பாக்கியால சரமாரியா சுட ஆரம்பிச்சாங்க. நான் அப்படியே ரோட்ல குப்புற படுத்துகிட்டேன். எனக்கு உயிரே போயிடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க கார்ல ஏறி போயிட்டாங்க. நானும் தப்பிச்சோம், பொழச்சோம்னு வந்து சேர்ந்தேன்" என்று சேகர் பபடப்புடன் சொல்லி முடித்தான். செந்தில் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் சேகரிடம், "அப்ப, நீ என்ன விட்டுட்டு, ஹோட்டலுக்குப் போய் பிரியாணி சாப்டுட்டு வந்திருக்க. அப்படித்தானே?" என்று கேட்டான்.

இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு. பல நேரங்களில் நகைச்சுவை வெறும் சிரிப்புக்காக மட்டுமல்ல. சிந்தனைக்கும் என்பது நமக்குத் தெரியும். இந்த நகைச்சுவைத் துணுக்கில் செந்திலின் கடைசிக் கேள்வி நம்மைச் சிரிக்க வைத்தாலும், சுருக்கென்று ஒரு ஊசியையும் நம் மனதில் ஏற்றுகிறது. தான் செத்துப் பிழைத்து வந்ததைப் பற்றி சேகர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, செந்திலின் கவனத்தை ஈர்த்ததெல்லாம் சேகர் சாப்பிட்ட பிரியாணி. அதுவும் தன்னை விட்டுவிட்டுத் அவன் தனியே சென்று சாப்பிட்ட பிரியாணி. வீடு பற்றி எரியும்போது, பீடி பற்றவைக்க நெருப்பு கேட்பது நினைவுக்கு வருகிறது. செந்திலின் குறுகியப் பார்வையே அவனது கேள்விக்குக் காரணம்.

உடல் அளவில் முழுமையான பார்வைத் திறன் கொண்ட நாம், பலமுறை அகத்தில் குறுகிய பார்வை கொண்டிருக்கிறோம், அல்லது அகக்கண்களை இழந்திருக்கிறோம். நம் அகக்கண்களைப் பற்றி, நமது பார்வை, அல்லது கண்ணோட்டத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்ச்சியை இன்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தப் புதுமை யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு திருவசனங்களில் முடிவடைகிறது. ஆனால், புதுமையைத் தொடர்ந்து 34 இறை வசனங்கள் வழியாக யோவான் ஒரு இறையியல் பாடமே நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்த பாடங்கள். பார்வை இழந்த மனிதர் உடல் அளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டு கொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடல் அளவில் பார்வை கொண்டிருந்த பரிசேயர்கள் படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும் யோவான் கூறியுள்ளார். இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை பெற்ற மனிதரின் பெற்றோர் அரைகுறையாய் பெறும் பார்வையைக் குறித்தும் யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.

இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச் சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார். பார்வை பெற்றவர் தன் வழியே போயிருந்தால், புதுமை முடிந்திருக்கும், சுபம் போட்டிருக்கலாம். புகழை விரும்பாத இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். ஆனால், நடந்தது வேறு. யோவான் நற்செய்தி 9: 7ல் அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்." என்று சொல்லப்பட்டுள்ளது. அவர் திரும்பி வந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின.

பார்வை பெற்றவர் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர். அவர் திரும்பி வந்ததற்கு என்ன காரணம்? தனக்கு இந்தப் புதுமையை, பெரும் நன்மையைச் செய்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள, அவருக்கு தன் நன்றியைக் கூற அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். பல்வேறு உடல் குறைகளால் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தன் நண்பர்கள் மத்தியில் தனக்கு நடந்ததை எடுத்துச் சொல்லி, மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். தான் எதுவும் கேட்காதபோது, தனக்கு இந்தப் புதுமையைச் செய்த அந்த மகானிடம் அவர்களையும் அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். இத்தனை நல்ல எண்ணங்களுடன் வந்தவர், தான் பெரியதொரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். புதுமை நடந்தது ஓர் ஒய்வு நாள் என்பதுதான் பிரச்சனை. வாழ்க்கையில் மலை போல் குவிந்திருந்த பல பிரச்சனைகளில் தினமும் வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்றெல்லாம் பாகுபாடுகள் இருந்ததில்லை. எனவே, கண் பார்வை பெற்றவருக்கு அது ஒய்வு நாள் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லை.

அதுவரை அவரது குறையைப் பார்த்து, தர்மம் செய்து வந்த பலர் அவர் குணமான பின் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சந்தேகப்பட்டனர். உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தால், உடலில், முக்கியமாக, முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது அனைவரும் அறிந்த பழமொழி. பார்வையிழந்து, பரிதாபமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் இயேசுவின் தொடுதலால் அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தார். சந்தேகத்தோடு தன்னைப் பார்த்தவர்களிடம் "நான்தான் அவன்." என்று பெருமையோடு, பூரிப்போடு சொன்னார். 'நான்தான் அவன்' என்று அவர் கூறிய அந்த நேரத்திலிருந்து இறைவனின் கருணைக்கு, புதுமைக்கு தான் ஒரு சாட்சி என்று புதிய வாழ்வை ஆரம்பித்தார். அவரது சாட்சிய வாழ்வுக்கு வந்த முதல் பிரச்சனை பரிசேயர்கள் தான். ஒன்றுமே இல்லாத இடங்களில் பிரச்சனையை உண்டாக்கும் திறமை படைத்தவர்கள் பரிசேயர்கள். அப்படிப்பட்டவர்கள் இந்தப் புதுமை ஒய்வு நாளில் நடந்தது என்று தெரிந்தபின் சும்மா இருப்பார்களா?

பார்வை பெற்றவர் பரிசேயர் முன்பு கூட்டிச் செல்லப்பட்டார். அவர்கள் கேள்வி கேட்டனர். அவர் பதில் சொன்னார். பரிசேயர்கள் அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து நழுவப் பார்த்தனர். பார்வையற்ற மகனை ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள் மகனை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள் அவ்வளவு தூரம் அவர்களைப் பயமுறுத்தி, பார்வை இழக்கச் செய்திருந்தது. அந்த பார்வையற்றவர் பிறந்தது முதல் தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்ததில்லை. இன்றுதான் முதல் முறையாக தன் பெற்றோரை, அந்த பரிசேயரைப் பார்க்கிறார். தன் பெற்றோரது பயத்தைக் கண்டு அவர் பரிதாபப்பட்டிருப்பார். அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள் அந்த பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் மிக நெருக்கத்தில் வாழும் இவர்கள் கடவுளை அறியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று அவர் பரிதாபப்பட்டிருப்பார்.
பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை, ஆனால், அகக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. அவரது சாட்சியம் தீவிரமாக, ஆழமாக ஒலித்தது. அதைக் கண்டு, அவரைக் கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கி இருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது.

இயேசுவைப் பற்றி அவர் சொன்ன கூற்றுகளையெல்லாம் தொகுத்து பார்த்தால், அவரது அகக்கண்கள் படிப்படியாய் இயேசுவைக் கண்ட புதுமையை உணரலாம்.
9/11 - இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி ஏன் கண்களில் பூசினார். இப்படிதான் அவரது சாட்சியம் ஆரம்பமாகிறது. இயேசு என்ற மனிதர்...
9/17 - அவர் ஒரு இறைவாக்கினர் என்று கூறுகிறார்.
9/33ல் இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால், இவரால் எதுவுமே செய்திருக்க முடியாது என்று ஆணித்தரமாய் சாட்சியம் கூறுகிறார்.. இவ்வாறு படிப்படியாக அக ஒளி பெற்ற அவரை இறுதியில் இயேசுவைச் சந்தித்த போது, அவரது அகம் முழுவதும் இறை ஒளியால் நிறைந்தது. இயேசுவின் முன் "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" என்று முழுமையாய் சரணடைகிறார்.

படிப்படியாக பார்வை பெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. இயேசுவின் மீது அவர்கள் வளர்த்து வந்த பொறாமை, வெறுப்பு இவைகள் ஏற்கனவே அவர்கள் பார்வையை வெகுவாய் பாதித்திருந்தன. "ஒய்வு நாள் சட்டத்தை கடைபிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது." (யோவான் 9: 16) என்று ஆரம்பிக்கும் அவர்களது எண்ண ஓட்டத்தை யோவான் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக் கொணர்கிறார். ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயந்தனர். இருளுக்கு பழகி விட்ட கண்களுக்கு பார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல் கோப வெறியாக மாறவே, அவர்கள் இயேசுவின் அந்த சாட்சியை வெளியே தள்ளினர்.

உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களால் நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக நாம் கூறுவோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஒரு எல்லையைத் தாண்டும் போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத் தான் அடிக்கடி கூறுகிறோம்.
'கண்மூடித்தனமான காதல்' என்று சொல்கிறோம். காதல் வயப்பட்டவர்களுக்கு பல்வேறு விஷயங்கள் கண்களில் படுவதில்லை. "தலை கால் தெரியாமல்" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுபவர்களை "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம்.
ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி எத்தனை விதமான வாக்கியங்கள் நம் பேச்சு வழக்கில் உள்ளன. உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார். கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். (மத்தேயு 6 : 22)

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும். கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்குப் புதிதாகக் குடி வந்தனர். அந்தப் பெண், காலையில் காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டுத்தலைவி துணிகளைத் துவைத்து, காய வைப்பதைப் பார்த்தார். "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு.." என்று கணவனிடம் அடுத்த வீட்டுக் குறையைச் சுட்டிக் காட்டினார். முறையீடுகள் 3 நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் வழக்கம் போல் ஜன்னல் வழியே பார்த்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்." என்று கணவனை அவசரமாக அழைத்தார். கணவன் வந்ததும், மனைவி சொன்னார்: "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு." என்று வியந்து பாராட்டினார். கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுலே ஒண்ணும் குறை இல்ல. இன்னக்கி நம்ம ஜன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்." என்று சொன்னார்.
பார்வை பெற வேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும்... தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும்... மனதையும், அறிவையும் குறுக்காமல், பரந்து விரிந்த பார்வை பெற வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.