2011-04-02 14:38:21

உலக அமைதிக்காக அசிசியில் அக்.27ல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உலக மதத் தலைவர்கள் செபம்


ஏப்.02,2011. உலகில் அமைதியும் நீதியும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற அக்டோபர் 27ம் தேதி இத்தாலியின் அசிசியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலக மதத் தலைவர்களுடன் ஒருநாள் செபம் செய்யவிருக்கிறார்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அசிசியில் 1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி உலக மதத் தலைவர்களுடன் உலக அமைதிக்காகச் செபம் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளின் 25ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக இவ்வாண்டு அக்டோபர் 27ம் தேதி அசிசியில் இதே செப நாள் இடம் பெறவிருக்கின்றது.
இந்த நினைவுநாளைச் சிறப்பிப்பது குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாண்டு சனவரி முதல் தேதி தனது மூவேளை செப உரையில் குறிப்பிட்டார்.
இத்தினம் குறித்து இச்சனிக்கிழமை அசிசியில் இடம் பெற்ற நிருபர் கூட்டத்தில் விளக்கிய அசிசி ஆயர் Domenico Sorrentino, இந்நாளுக்குத் தயாரிப்பாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அக்டோபர் 26ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் உரோம் மறைமாநில விசுவாசிகளுடன் திருவிழிப்புச் செபம் நடத்துவார் என்றார்.
உலகெங்கும் இருக்கின்ற அனைத்து கிறிஸ்தவசபைகளும் சமூகங்களும் இத்தகைய செபக்கூட்டங்களை இதே நேரத்தில் நடத்துவதற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும் ஆயர் அறிவித்தார்.
“உண்மையின் திருப்பயணிகள், அமைதியின் திருப்பயணிகள்”என்ற தலைப்பில் வருகிற அக்டோபர் 27ம் தேதி இடம்பெறும் இந்த முக்கியச் செபக்கூட்டத்தில் தன்னோடு சேர்ந்து கத்தோலிக்கர் செபிக்குமாறும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளார் என்றும் நிருபர் கூட்டத்தில் கூறப்பட்டது







All the contents on this site are copyrighted ©.