2011-04-01 16:13:05

கர்தினால் விதயத்தில் இறைபதம் அடைந்தார், திருத்தந்தையின் இரங்கல் செய்தி


ஏப்.01,2011: கேரளாவின் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான கர்தினால் மார் வர்கி விதயத்தில் (Varkey Vithayathil) இறைபதம் அடைந்ததையொட்டி தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரளாவின் Kakkanad சீரோ-மலபார் ரீதி தலைமையக நிர்வாகி ஆயர் Mar Bosco Puthurக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினாலின் பிரிவால் வருந்தும் சீரோ-மலபார் திருச்சபையின் குருக்கள், துறவிகள் மற்றும் பொது நிலையினருக்குத் தனது செபத்துடன்கூடிய அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
சீரோ-மலபார் திருச்சபைக்கும் அகிலத் திருச்சபைக்கும் இவர் தன்னை அர்ப்பணித்து ஆற்றிய சேவைகளையும் அதில் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.
இவ்வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்த கர்தினால் விதயத்தில், கேரளாவின் பாரூரில் 1927ம் ஆண்டு மே 29ம் தேதி பிறந்தார். இவர் உலக இரட்சகர் துறவு சபையில் சேர்ந்து 1954ல் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். 1996ல் பேராயராக நியமிக்கப்பட்ட இவர், 1999ல் எர்ணாகுளம் அங்கமாலி பேராயராகவும் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2001ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, 2005ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற பாப்பிறைத் தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கர்தினால் விதயத்தில். 2008 முதல் 2010 வரை இந்திய ஆயர் பேரவையின் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.
கர்தினால் விதயத்திலின் இறப்போடு திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 200. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 116. இவர்களில் இந்தியக் கர்தினால்களின் எண்ணிக்கை 5. இவர்களில் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 3







All the contents on this site are copyrighted ©.