2011-04-01 14:41:28

ஏப்ரல் 02. வாழ்ந்தவர் வழியில்...........


இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆன வ. வே. சு. ஐயர் என அறியப்படும் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் 1881ம் ஆண்டு ஏப்ரல் 2ம்தேதி பிறந்தார்.
வ. வே. சு. ஐயர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றார். பின்னர் சென்னை சென்று பயின்று வழக்கறிஞரானார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.
1907ல் பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இலண்டன் சென்ற வ.வே.சு.வை, அரசியல் போராட்டம் சுதந்திர வீரராக்கியது. பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் இராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பது வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு., பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டானிய உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910ம்ஆண்டு அக்டோபர் 9ம் தேதி வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.
இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரித்தார். கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார். பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மகாகவி பாரதியாரோடு மிகுந்த நட்பு கொண்டிருந்தார்.
1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். குருகுல மாணவர்களுடன் 1925 ஜூன் மாதம் 3ம் தேதி அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகள் சுபத்திரையைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4ல் அணைந்தது.
வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் அங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.