2011-04-01 16:14:19

உலகின் அடிப்படைவாதப் போக்குகளுக்கு மாற்றாக இருப்பது பல்சமய உரையாடல்: வத்திக்கான் உயர் அதிகாரி


ஏப்.01,2011: உலகில் இடம் பெறும் உலகாயுத மற்றும் அடிப்படைவாதப் போக்குகளுக்கு மாற்றாக இருப்பது பல்சமய உரையாடல் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இன்றைய உலகில் காணப்படும் உலகாயுத மற்றும் அடிப்படைவாத நடவடிக்கைகள் உண்மையான சுதந்திரத்திற்கும் ஆன்மீக விழுமியங்களுக்கும் எதிரியாக இருக்கும்வேளை, அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதற்கும் ஒன்றிணைந்து உழைப்பதற்கும் பல்சமய உரையாடலை “மிக உயரிய பாதையாக” கைக்கொள்ளலாம் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
புத்த மதத்தினர் சிறப்பிக்கும் வேசாக் (Vesakh) விழாவை முன்னிட்டு உலகின் எல்லாப் புத்த மதத்தினருக்குமென திருப்பீட பல்சமய உரையாடல் அவை வெளியிட்ட செய்தியில், இவ்விழா, உலகெங்கும் வாழும் புத்த மதத்தினருக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரவேண்டுமென்று கத்தோலிக்கர் செபிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அமைதி, உண்மை, சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் உறவு பற்றிக் குறிப்பிட்டு, உண்மையான அமைதியைத் தேடும் பாதையில் உண்மையைத் தேடுவதற்கான அர்ப்பணம் மிகவும் அவசியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வேசாக் விழா ஜப்பானில் ஏப்ரல் 8ம் தேதியும், கொரியா, சீனா, தாய்வான் வியட்நாம் ஆகிய நாடுகளில் மே 10ம் தேதியும், தாய்லாந்து, இலங்கை, கம்போடியா பர்மா, லாவோஸ் ஆகிய நாடுகளில் மே 17ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா, புத்தரின் பிறப்பு, அவர் விழிப்புணர்வு அடைந்தது, அவரின் இறப்பு ஆகியவைகளைக் குறிக்கின்றது.
“விடுதலையில் உண்மையைத் தேடுதல்: கிறிஸ்தவர்களும் புத்த மதத்தினரும் அமைதியில் வாழ” என்ற தலைப்பில் இச்செய்தி இவ்வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அதன் செயலர் பேராயர் பியர் லூயிஜி செலாத்தா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.