2011-04-01 16:18:10

இந்தியாவின் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் வெளிநாடுகளில் வேலை செய்வோர் பலர் விடப்பட்டுள்ளனர்-கோவா தலத்திருச்சபை


ஏப்.01,2011: இந்தியாவின் மக்கள்தொகை தற்போது 121 கோடியாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளவேளை, வெளிநாடுகள் மற்றும் கப்பல்களில் வேலை செய்யும் கோவா மாநில மக்களில் பலர் இந்தப் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கோவா மறைமாநில சமூகநீதி மற்றும் அமைதிப்பணிக்குழு இயக்குனர் அருட்பணி Valeriano Vaz குறை கூறினார்.
வெளிநாடுகள் வேலை செய்யும் கோவா மாநில மக்கள் இந்தப் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடப்பட்டுள்ளவேளை, தற்போது கோவாவில் வேலைசெய்யும் குடியேற்றதாரர்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அக்குரு தெரிவித்தார்.
சரியாக எடுக்கப்படாத இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, பின்னாளில் அரசின் பல சலுகைத் திட்டங்களிலிருந்து கத்தோலிக்கர் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணமாக அமையக்கூடும் என்றும் அருட்பணி Valeriano Vaz எச்சரித்தார்.
இவ்வியாழனன்று வெளியான அறிவிப்பின்படி, இந்த மார்ச் முதல் தேதியோடு இந்தியாவின் புதிய மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடியே 10 இலட்சமாக அதிகரித்துள்ளது.
ஆயினும் கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 விழுக்காடாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு 17.64 விழுக்காடாகக் குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும் போது தற்போது இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது என்று தெரிகிறது.
இப்போதைய இந்தியாவின் மொத்த மக்கள் தொகை உலக மக்கள்தொகையில் 17.5 விழுக்காடாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால் அதை விட அதிகமாக இந்தியாவின் மக்கள்தொகை உள்ளது.
ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 இலட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 இலட்சம்.
ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது எனவும் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது எனவும் இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக்குறைவான விகிதம் எனவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.