2011-03-31 15:57:03

ஒசாகா துணை ஆயர் : புகுஷிமாவில் உருவாகியுள்ள ஆபத்து ஜப்பானுக்கும் அகில உலகுக்கும் பாடம்


மார்ச் 31,2011. புகுஷிமாவில் உருவாகியுள்ள ஆபத்துக்களைக் கண்ட பின்னர் ஜப்பான் வருங்காலத்தில் அணுசக்தி நிலையங்களைப் பற்றிய தன் நிலைப்பாட்டை ஆராய வேண்டும் என்று Osaka மறைமாவட்டத்தின் துணை ஆயர் Michael Goro Matsuura கூறினார்.
மிக ஆபத்தான இந்த விபத்து, உலகில் வாழும் அனைவரையும் விழித்தெழ வைத்துள்ளது என்று கூறிய ஆயர் Matsuura, அணுசக்தி நிலையங்களை ஜப்பானிலும் இன்னும் பிற நாடுகளிலும் எழுப்புவது குறித்து ஜப்பான் அரசு மிகத் தீவிரமாக எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அப்படி செய்வது மனித குலத்திற்கு இந்நாடு செய்யக்கூடிய ஒரு பெரும் சேவை என்றும் வலியுறுத்திக் கூறினார்.
புகுஷிமா அணுசக்தி நிலையத்தைச் சுற்றி 30 கிலோமீட்டர் வட்டத்தில் வாழும் அனைவரும் மிகுந்த கவலையுடன் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பிற இடங்களுக்குச் செல்ல தயாராக உள்ளதாகவும் Saitama மறைமாவட்ட ஆயர் Marcellino Daiji Tani கூறினார்.அணுசக்தியை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பான் ஆயர் அவை சென்ற ஆண்டு தங்கள் நிலைப்பாட்டை அறிவித்திருந்தது. புகுஷிமா விபத்துக்குப் பின், ஜப்பான் ஆயர் பேரவை அணு ஆயுதங்களை இந்த உலகிலிருந்து முற்றிலும் அழிக்க வேண்டும் என்று தங்கள் அரசுக்கும், அமெரிக்க அரசுத் தலைவருக்கும், இன்னும் பிற உலகத் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் என்று FIDES செய்தியொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.