2011-03-31 15:53:43

அப்போஸ்தலிக்க நிர்வாகி : அமைதிக்கான பாதை ஆப்ரிக்க ஒன்றியத்தின் வழியே செல்ல வேண்டும்


மார்ச் 31,2011. மனித குலத்தைக் காப்பதற்காக லிபியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அந்நிய நாட்டுத் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று Tripoli மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறியுள்ளார்.
லிபியாவில் நிலவும் வன்முறைச் சூழலைத் தீர்க்க, இச்செவ்வாயன்று லண்டனில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆப்ரிக்க ஒன்றியத்திலிருந்து ஒருவரையும் அழைக்காதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறதென்று ஆயர் Martinelli, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
லிபியாவில் புரட்சி செய்து வரும் குழுக்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினருக்கு எதிராகப் போரிடுவதற்கு அவர்களுக்கு இராணுவத் தளவாடங்களை அளிப்பது சரியான தீர்வாகாது என்று ஆயர் Martinelli எச்சரித்தார்.
தற்போது ஐரோப்பியப் படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடைபெறுவதாகக் கூறினாலும், இந்தத் தாக்குதல்களில் ஒரு மருத்துவமனையும் பாதிக்கப்பட்டதைத் தான் அறிந்துள்ளதாகவும், அம்மருத்துவமனையில் உள்ளவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதை உணர முடிந்ததென்றும் ஆயர் விளக்கினார்.ஆப்ரிக்காவின் ஒரு பகுதியாக விளங்கும் லிபியாவில் நிரந்தர தீர்வு உண்டாக வேண்டுமெனில், அரேபிய நாட்டுத் தலைவர்களும், ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவர்களும் சேர்ந்து வந்து இந்தத் தீர்வைக் காண்பதே சிறந்த வழி என்று ஆயர் Martinelli வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.