2011-03-30 15:30:57

பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, சீன அரசு நிறைவேற்றிய மரணதண்டனை


மார்ச் 30,2011. பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்க்காமல், சீன அரசு Xiamen மற்றும் Shenzhen நகரங்களில் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவருக்கு இப்புதனன்று மரணதண்டனையை நிறைவேற்றியது.
2008ம் ஆண்டு போதைபொருள் கடத்தல் குற்றத்தில் பிடிபட்ட Sally Villanueva, Ramon Credo மற்றும் Elizabeth Batain ஆகிய மூவருக்கும் அந்நாட்டின் சட்டப்படி மரண தண்டனை வழங்கப்பட்டது. இப்புதனன்று நச்சு மருந்து ஊசி மூலம் இம்மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இப்புதன் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் என்பதால், இச்செவ்வாய் இரவு முழுவதும் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செபங்களுடன் கூடிய முழு இரவு திருவிழிப்பு மேற்கொள்ளப்பட்டது.
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் மற்றும் நாடோடிகளுக்கான மேய்ப்புப் பணிக் குழு ஏற்பாடு செய்திருந்த இச்செப வழிபாட்டில் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மரண தண்டனை பெற்ற இம்மூவரின் குடும்பத்தினரும், சில மனித உரிமை ஆர்வலர்களும் கடந்த சில நாட்களாய் சீன அரசுக்கு கருணை மனுக்களை அனுப்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், அண்மையில் வெளியான Amnesty International அறிக்கையின் படி, சீனாவில் மட்டுமே 2010ம் ஆண்டு 1000க்கும் மேற்பட்ட மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.